திருநெல்வேலியில் தொடர் மழை: தாமிரபரணியில் வெள்ளம்
திருநெல்வேலியில் தொடர் மழை: தாமிரபரணியில் வெள்ளம்
ADDED : நவ 24, 2025 02:31 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறுக்குத்துறை முருகன் கோயிலை மூழ்கடித்த படி வெள்ளம் சென்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை, மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் நாலுமுக்கு எஸ்டேட்டில் 256 மி.மீ. ஊத்து எஸ்டேட்டில் 250 மி.மீ.,காக்காச்சியில் 225 மி.மீ. மாஞ்சோலையில் 210 மி.மீ. மழை பதிவானது.
பாபநாசத்தில் 78 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 75 மி.மீ., சேரன்மகாதேவியில் 69 மி.மீ. மி.மீ., மழை பெய்தது.
பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 121 அடி(மொத்த உயரம் 143 அடி), மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 100 அடியானது( மொத்த உயரம் 118 அடி). பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 6200 கன அடி வீதமும் மணிமுத்தாறு அணைக்கு 3000 கன அடி வீதமும் நீர்வரத்து இருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழை தாமிரபரணி ஆற்றில் வெள்ளமாக சென்றது.
இதனால் திருநெல்வேலி ஜங்ஷன் குறுக்குத்துறை முருகன் கோயில் கட்டுமானத்தை மூழ்கடித்தது. அங்கிருந்த சுவாமி விக்ரகங்கள் ,முக்கிய பொருட்கள் கரையில் உள்ள கோயிலுக்கு ஏற்கனவே பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன.

