ராஜ்நிவாஸ் - ஆம் ஆத்மி இடையே தொடரும் 'பனிப்போர்' உச்சகட்டம்
ராஜ்நிவாஸ் - ஆம் ஆத்மி இடையே தொடரும் 'பனிப்போர்' உச்சகட்டம்
ADDED : ஆக 08, 2024 12:05 AM
மாநகராட்சிக்கு 10 கவுன்சிலர்களை நியமிக்கும் அதிகாரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, துணை நிலை கவர்னர் மற்றும் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு இடையேயான 'பனிப்போரை' தீவிரப்படுத்தியுள்ளது.
டில்லி மாநகராட்சி கவுன்சிலிற்கு 10 கவுன்சிலர்களை நியமிக்க, துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசு வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை 15 மாதங்களுக்குப் பிறகு கடந்த திங்கட்கிழமை வழங்கியது.
மாநகராட்சிக்கு 10 கவுன்சிலர்களை நியமிக்கும் முன்பு, அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின்படி துணை நிலை கவர்னர் செயல்பட உத்தரவிட வேண்டும் என்ற டில்லி அரசின் மனுவை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்த்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த விவகாரம் குறித்து மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்வதற்கான வழிமுறைகளை ஆம் ஆத்மி ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியானது. இதற்கு பதிலடியாக துணைநிலை கவர்னர் அலுவலகம், மறைமுகமாக கண்டித்து, பொதுநலனில் கவனம் செலுத்தும்படி அறிவுரை வழங்கியுள்ளது.
டில்லி மாநகராட்சியில், மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. 2022ல் நடந்த மாநகராட்சித் தேர்தலில் 134 வார்டுகளை ஆம் ஆத்மி வென்றது. 104 இடங்களில் பா.ஜ.,வும் ஒன்பது இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வென்றன.
மாநகராட்சிக்கு 10 கவுன்சிலர்களை துணை நிலை கவர்னர் நியமிப்பதனால், நிலைக்குழுவில் பா.ஜ.,வின் கை ஓங்கும் என, ஆம் ஆத்மி அஞ்சுகிறது. அதனால் தான் நினைத்ததை செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதே அக்கட்சியின் கவலை.
ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கால் கடந்த 1.5 ஆண்டுகளாக நிலைக்குழுவுக்கு தேர்தல் நடத்தப்படாமல், முடங்கியுள்ளது. தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதால் மாநகராட்சியில் சுறுசுறுப்பு தென்படுகிறது.
- நமது நிருபர் -