தொடர்ந்து பேசியது முடிந்த கதை: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
தொடர்ந்து பேசியது முடிந்த கதை: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
ADDED : ஆக 30, 2024 11:19 PM
புதுடில்லி: பாகிஸ்தானில் நடக்கவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, அந்த நாடு அழைப்பு விடுத்துள்ள நிலையில், “பாகிஸ்தானுடன் இடைவிடாது பேச்சு நடத்திய காலமெல்லாம் முடிந்துவிட்டது.
“எல்லையில் நல்லது - கெட்டது எது நடந்தாலும், அதற்கான விளைவுகளை அவர்கள் எதிர்கொண்டே ஆக வேண்டும்,” என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. இந்தியா, சீனா, கஜகஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான் உட்பட, 10 நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.
பதிலடி கிடைக்கும்
அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடக்கவுள்ள இந்த அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க வரும்படி, பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தது. இதை நம் வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்திருந்தது.
இந்நிலையில், டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
அண்டை நாடுகள் எப்போதுமே புதிர் தான். தங்களின் அண்டை நாடுகளுடன் எந்த நாட்டுக்கு தான் சவால்கள், சண்டை சச்சரவுகள் இல்லை சொல்லுங்கள்.
ஜம்மு - காஷ்மீரை பொறுத்தவரை, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் எவ்வித மாற்றமும் இருக்கப் போவதில்லை.
எனவே, பாகிஸ்தான் உடனான உறவு எப்படி இருக்கப் போகிறது என்பது தான் கேள்வியே. ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
பாக்., உடன் இடைவிடாது பேச்சு நடத்தும் காலமெல்லாம் முடிந்துவிட்டது. நாம் வேடிக்கை பார்க்கும் இடத்தில் இல்லை.
அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் தகுந்த விளைவுகளை அவர்கள் சந்தித்தே தீர வேண்டும். அது நல்லது ஆனாலும் சரி, கெட்டது ஆனாலும் சரி. தகுந்த பதில் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பாகிஸ்தானில் நடக்கவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு பாக்., அழைப்பு விடுத்துள்ள நிலையில், அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
புறக்கணிக்க முடிவு?
ஜம்மு - காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுக்கும், நமக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வந்தாலும், முந்தைய காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது, பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது பேசியுள்ளது, பாகிஸ்தானின் அழைப்பை, பிரதமர் புறக்கணிப்பார் என்பதை மறைமுகமாக உணர்த்துவதாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.