ADDED : ஆக 18, 2024 11:30 PM
பெங்களூரு: நீதிமன்ற வழக்குகளை சமாளிக்க முடியாமல், பி.டி.ஏ., எனும் பெங்களூரு வளர்ச்சி ஆணையம் திணறி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
பி.டி.ஏ., எனும் பெங்களூரு வளர்ச்சி ஆணையம், பெங்களூரு நகரில் நிலங்களை கையகப்படுத்தி, புதிய லே - அவுட் அமைக்கும் பணியை செய்கிறது.
நிலம் கையகப்படுத்தும் போது, நிலங்களின் உரிமையாளர்களுக்கு முறையான, இழப்பீடு வழங்குவது இல்லை என்று, பி.டி.ஏ., மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுதொடர்பாக பி.டி.ஏ., மீது நீதிமன்றங்களிலும், வழக்குகள் உள்ளன.
கடந்த மாத நிலவரப்படி உச்ச நீதிமன்றத்தில் 222, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 2,747, சிவில் நீதிமன்றத்தில் 2,431, கர்நாடக நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் 41, 'ரெரா' எனும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் 27 என 5,468 வழக்குகள், பி.டி.ஏ., மீது இருந்தன.
இதில் 2,000 வழக்குகளுக்கு பி.டி.ஏ., தீர்வு கண்டு உள்ளது. ஆனாலும் வழக்குகளை சமாளிக்க முடியாமல், பி.டி.ஏ., திணறி வருகிறது.
இதுகுறித்து பி.டி.ஏ., தலைவர் ஜெயராம் கூறுகையில், '' பி.டி.ஏ., மீது நீதிமன்றங்களில் வழக்கு உள்ளன. அவற்றை தீர்ப்பதில் நாங்கள் மும்முரமாக செயல்பட்டு வருகிறோம்.
''சட்ட பிரச்னையில் இருந்து வெளியே வந்துள்ள, லே - அவுட்களுக்கு முறையான வசதி ஏற்படுத்தி கொடுக்கவில்லை என்றும், எங்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது.
''இதிலும் சில சிக்கல்கள் உள்ளன. அதை சரி செய்து வருகிறோம். பி.டி.ஏ.,வுக்கு சொந்தமான நிலத்தை, சில ஆக்கிரமித்து உள்ளனர். அதையும் மீட்டு வருகிறோம்,'' என்றார்.

