ஆன்லைன் மோசடியில் சிக்கிய திரிணமுல் காங். எம்.பி; வங்கிக் கணக்கில் ரூ.55 லட்சம் திருட்டு
ஆன்லைன் மோசடியில் சிக்கிய திரிணமுல் காங். எம்.பி; வங்கிக் கணக்கில் ரூ.55 லட்சம் திருட்டு
UPDATED : நவ 07, 2025 06:20 PM
ADDED : நவ 07, 2025 06:18 PM

கோல்கட்டா; திரிணமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.55 லட்சம் மாயமாகி உள்ளது. இது குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் கல்யாண் பானர்ஜி. 4 முறை எம்பி. தற்போது செரம்பூர் லோக்சபா எம்பியாக உள்ளார். இவருக்கு கோல்கட்டா ஐகோர்ட் வளாகத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் வங்கியில் கணக்கு உள்ளது.
இந் நிலையில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.55 லட்சம் பணம் மாயமாகி இருப்பதாக சைபர் க்ரைம் போலீசில் வங்கி அதிகாரிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. போலீசாரின் விசாரணையில் மோசடி நபர்கள், கல்யாண் பானர்ஜியின் கணக்கின் KYC விவரங்களை புதுப்பிக்க போலியான பான் மற்றும் ஆதார் அட்டைகளை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது.
இதற்காக, 2025ம் ஆண்டு அக்.28ம் தேதி வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணை மாற்றி உள்ளனர். சான்றுகள் உள்ளிட்ட விவரங்களை மாற்றிய பின்னர், படிப்படியாக ஆன்லைன் மூலமாக கிட்டத்தட்ட ரூ.55 லட்சம் வரை மோசடியாக பணம் எடுத்துள்ளனர்.
வங்கிக்கணக்கானது, பல ஆண்டுகளாக செயலற்ற கணக்காக இருந்துள்ளது. அதாவது, 2001 மற்றும் 2006ம் ஆண்டுக்கு இடையில் அசான்சோல் எம்எல்ஏவாக கல்யாண் பானர்ஜி இருந்த போது, மற்ற எம்எல்ஏக்களுடன் சேர்ந்து இந்த வங்கிக் கணக்கு திறக்கப்பட்டது. அவரின் சம்பளம் இந்த கணக்கில் தான் வரவு வைக்கப்பட்டு இருக்கிறது.
அதன் பின்னர், காளிகாட் கிளையில் உள்ள தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கை கல்யாண் பானர்ஜி பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். அதனால், ஐகோர்ட் கிளையில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கணக்கு செயலற்றதாக இருந்திருக்கிறது. காளிகாட் கிளையில் இருந்து ரூ.55 லட்சத்தை ஐகோர்ட் கிளையின் வங்கிக் கணக்கிற்கு பரிவர்த்தனை செய்த போது தான் பணம் ஆன்லைன் வழியாக திருடப்பட்டு உள்ளது.
செயலற்ற கணக்கு என்ற பிரிவின் கீழ் இருந்த இந்த வங்கிக் கணக்கானது தற்போது ஆன்லைன் மோசடி மூலம் பயன்படுத்தப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

