அணுஆயுத கடத்தலின் மையமாக திகழும் பாக்.,: இந்தியா குற்றச்சாட்டு
அணுஆயுத கடத்தலின் மையமாக திகழும் பாக்.,: இந்தியா குற்றச்சாட்டு
ADDED : நவ 07, 2025 05:57 PM

புதுடில்லி: '' அணுஆயுத கடத்தல், ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமீறல், ரகசிய கூட்டணி, விஞ்ஞானி ஏகியூ கான் கூட்டாளிகள் உள்ளிட்டவற்றின் மையமாக பாகிஸ்தான் திகழ்ந்து வருகிறது'', என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், 'பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட பல நாடுகள் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்து வரும் நிலையில், அமெரிக்கா மட்டும் அமைதியாக இருக்க முடியாது. ஆகையால் தன்னிடம் உள்ள ஆயுதங்களை அமெரிக்கா சோதனை செய்ய வேண்டும் என போர்த்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்,' எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: ரகசிய மற்றும் சட்டவிரோத அணுசக்தி நடவடிக்கைகள் பாகிஸ்தான் வரலாற்றில் ஒத்துப்போகின்றன. அந்நாடு அணுஆயுத கடத்தல், ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமீறல், ரகசிய கூட்டணி, விஞ்ஞானி ஏகியூ கான் கூட்டாளிகள் உள்ளிட்டவற்றின் மையமாக பாகிஸ்தான் திகழ்ந்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளை எப்போதும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு இந்தியா கொண்டு சென்றுள்ளது. பாகிஸ்தானின் அணுஆயுத சோதனை குறித்த டிரம்ப்பின் கருத்தை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.
உறுப்பு நாடுகளுக்கு இடையே முக்கிய விஷயங்கள் குறித்து பேசுவதற்கும், இந்தியா பசுபிக் பிராந்திய நலன் குறித்து விவாதிக்கவும் மதிப்புமிக்க தலமாக குவாட் அமைப்பை இந்தியா கருதுகிறது. குவாட் அமைப்பு தொடர்ந்து வளர்ச்சி பெறுகிறது. சமீபத்தில் மும்பையில் இந்திய கடலோர பாதுகாப்பு வாரம் நடந்தது. குவாட் துறைமுகம் தொடர்பான கருத்தரங்கமும் நடந்தது.
இந்திய வருகை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துகள் கவனிக்கத்தக்கவை. இது குறித்து பகிர்வதற்கு எந்த தகவலும் இல்லை. இது குறித்து அறிந்ததும் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

