பாக்., அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்த இந்திரா அனுமதி தரவில்லை: சிஐஏ முன்னாள் அதிகாரி பேட்டி
பாக்., அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்த இந்திரா அனுமதி தரவில்லை: சிஐஏ முன்னாள் அதிகாரி பேட்டி
UPDATED : நவ 07, 2025 07:04 PM
ADDED : நவ 07, 2025 07:02 PM

வாஷிங்டன்: '' பாகிஸ்தானின் அணுஆயுத திட்டங்களுக்கு முக்கிய மையமாக திகழும் கஹுதா அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்த கடந்த 1980 களில் இந்தியாவும் இஸ்ரேலும் திட்டமிட்டன. ஆனால், அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா அதற்கு ஒப்புதல் தரவில்லை,'' என அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயின் முன்னாள் அதிகாரி ரிச்சர்ட் பார்லோவ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அமைந்துள்ளது கஹூதா அணுசக்தி நிலையம். அந்நாட்டின் அணுசக்தி திட்டங்களுக்கு இந்த மையம் தான் முக்கியமாக திகழ்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அணுஆயுதங்களை தயாரிக்காமல் இருப்பதற்கும், ஈரானுக்கு வழங்காமல் இருப்பதற்கும் , 1980களில் யுரேனியம் செறிவூட்டப்பட்டு வந்த இந்த அணுசக்தி மையம் தாக்குதல் நடத்துவது என இந்தியாவும், இஸ்ரேலும் திட்டம் தீட்டியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் பரம எதிரி நாடாக ஈரான் திகழ்வதால் அந்த நாட்டிற்கு அணு ஆயுதங்கள் கிடைக்கக்கூடாது என இஸ்ரேல் விரும்பியது.
இச்சூழ்நிலையில், 1980 களில் அணுஆயுத பெருக்கம், பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை தடுப்பதற்காக பாகிஸ்தானில் பணியாற்றிய சிஐஏயின் முன்னாள் அதிகாரியான ரிச்சர்ட் பார்லோவ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
1982 முதல் 1985 வரை அரசின் சார்பில் எந்தப் பணியிலும் நான் இல்லை. அந்த காலகட்டத்தில் அது நடந்து இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். கஹூதா அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்த இந்தியா - இஸ்ரேல் திட்டம் குறித்து கேள்விப்பட்டேன். ஆனால், நடக்காததால், அந்த விவகாரம் தொடர்பாக நான் கவனிக்கவில்லை. இந்த திட்டத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா அனுமதி கொடுக்காதது வெட்கப்பட வேண்டியது. இது மட்டும் நடந்திருந்தால், ஏராமான பிரச்னைகள் தீர்ந்திருக்கும்.
அமெரிக்காவில் அப்போது அதிபராக ரோனால்ட் ரீகன் இருந்த போது, ஆப்கானிஸ்தானில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மறைமுக போர் தொடுத்து இருந்தது. அந்த நேரத்தில் தாக்குதல் நடந்தால், அது இந்த போரை பாதிக்கும் என இஸ்ரேலுக்கு ரீகன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை பாகிஸ்தான் சாதகமாக பயன்படுத்தி கொண்டது. இவ்வாறு அவர் கூறினார்.

