'ஜாமின் விதி; சிறை விதிவிலக்கு கடுமையான சட்டத்துக்கும் உண்டு'
'ஜாமின் விதி; சிறை விதிவிலக்கு கடுமையான சட்டத்துக்கும் உண்டு'
ADDED : ஆக 13, 2024 10:58 PM

புதுடில்லி :பீஹாரின் பாட்னாவைச் சேர்ந்த ஜலாலுதீன் கான் என்பவர், தன் வீட்டின் ஒரு பகுதியை, தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த சிலருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.
அந்த வீட்டில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சதி திட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்தது.
குறிப்பாக, 2022ல் பிரதமர் நரேந்திர மோடி பீஹாருக்கு வரும்போது, பயங்கரவாத செயல்களை நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாக, தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், அவர்களுக்கு உதவியதாக ஜலாலுதீன் கானும் கைது செய்யப்பட்டார்.
முதலில் அவர்களுடன் தொடர்பு ஏதும் இல்லை என்று மறுத்தவர், பின்னர் அந்த அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவர் மீது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்ற கடுமையான சட்டத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அவருடைய ஜாமின் மனுக்களை விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தன.
இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:
ஜாமின் தான் விதி, சிறை விதிவிலக்கு என்பது நீதித் துறையின் கொள்கை.
இந்த வழக்கில், இவர் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை. இருப்பினும், சட்டத்துக்கு உட்பட்டே நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும். ஜாமின் மறுப்பது என்பது, தனிப்பட்ட சுதந்திரத்தை மீறுவதாக அமைந்துவிடும்.
மிகவும் கடுமையான சட்டத்திலும், சூழ்நிலைக்கு ஏற்ப ஜாமின் வழங்க வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

