54 ராஜ்யசபா எம்.பி.,க்கள் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது
54 ராஜ்யசபா எம்.பி.,க்கள் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது
ADDED : ஏப் 02, 2024 11:35 PM

புதுடில்லி :முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ., வைச் சேர்ந்த ஏழு மத்திய அமைச்சர்கள் உட்பட, 54 ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.
ராஜ்யசபாவை சேர்ந்த 49 எம்.பி.,க்களின் பதவிக்காலம் நேற்றும், ஐந்து எம்.பி.,க்களின் பதவிக்காலம் இன்றும் முடிவுக்கு வந்துள்ளது.
இதில், பா.ஜ.,வை சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கால்நடைத்துறை அமைச்சர் புருஷோத்தம் ருபாலா, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே, தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் முருகன் உள்ளிட்டோர் பதவிக்காலம் நேற்று முடிவுக்கு வந்தது.
இவர்கள் அனைவருக்கும் லோக்சபா தேர்தலில் சீட் வழங்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால ராஜ்யசபா பணி, இன்றுடன் முடிவுக்கு வருகிறது. ராஜஸ்தானில் இருந்து இவர் தேர்வான இடத்துக்கு காங்., முன்னாள் தலைவர் சோனியா முதல்முறையாக தேர்வாகி உள்ளார்.

