மறுபயன்பாடு ராக்கெட்டின் மூன்றாவது சோதனையும் வெற்றி
மறுபயன்பாடு ராக்கெட்டின் மூன்றாவது சோதனையும் வெற்றி
UPDATED : ஜூன் 24, 2024 07:27 AM
ADDED : ஜூன் 24, 2024 12:51 AM

பெங்களூரு : விண்கலங்களை சுமந்து செல்லும் மறுபயன்பாடு ராக்கெட்டை தரையிறக்கும் மூன்றாவது சோதனையையும், இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
விண்வெளி பயணத்தின்போது, விண்கலங்களை சுமந்து செல்லும் ராக்கெட்டுகளில் பெரும்பாலானவை திரும்பி வருவதில்லை.
அவை விண்வெளியிலேயே பல பாகங்களாகப் பிரிந்து, விண்வெளி குப்பையாக மாறிவிடுகின்றன.
சில நேரங்களில் கீழே விழும் ராக்கெட்டுகள், வெப்ப உராய்வின் காரணமாக பூமியை அடைவதற்கு முன் எரிந்து விடும்.
இதையடுத்து, மறுபயன்பாடு ராக்கெட்டுகள் தயாரிக்கும் முயற்சி துவங்கியது. தற்போதைக்கு அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகியவை மட்டுமே மறுபயன்பாடு ராக்கெட் தயாரிக்கின்றன.
முழுதும் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன், உள்நாட்டிலேயே மறுபயன்பாடு ராக்கெட் தயாரிக்கும் முயற்சியில், இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஈடுபட்டுள்ளது.
புஷ்பக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த முழு மறுபயன்பாடு ராக்கெட்டின் தரையிறங்கும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை நடந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள விண்வெளி மைய தளத்தில் நேற்று காலை 7:10 மணிக்கு மூன்றாவது சோதனை நடத்தப்பட்டது.
இதன்படி, ஒரு ஹெலிகாப்டர், புஷ்பக் ராக்கெட்டை சுமந்து சென்று, தரையில் இருந்து, 4.5 கி.மீ., உயரத்தில் அதை விடுவித்தது. வேகமாக தரையிறங்கிய அந்த ராக்கெட், விண்வெளி மைய தளத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
அனைத்து அம்சங்களும் எதிர்பார்த்த வகையில் வெற்றிகரமாக அமைந்ததாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.