ADDED : மே 04, 2024 01:45 AM
கொச்சி, கேரளாவில் கர்ப்பத்தை மறைத்து பெற்றெடுத்த குழந்தையை, இளம்பெண் ஒருவர் தெருவில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கொச்சியில் உள்ள பானம்பிள்ளி நகரில், நேற்று காலை துப்புரவு பணியாளர்கள் குப்பையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பிளாஸ்டிக் பை ஒன்றில், இறந்த நிலையில் இருந்த சிசுவின் உடலை பார்த்து, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிசு உடல் வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனத்தின் பையில் இருந்த முகவரியை வைத்து விசாரணையை துவக்கினர். அந்த நிறுவனத்தில் இருந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த பகுதியில் உள்ள ஆடம்பரமான குடியிருப்பு பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், அங்கிருந்த இளம்பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்து, அதை தெருவில் வீசியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது:
ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், தன் பெற்றொருடன் 23 வயது பெண் ஒருவர் வசித்து வந்தார். திருமணமாகாத இவர், கர்ப்பம் தரித்த நிலையில், அதை தன் பெற்றோரிடம் மறைத்து வைத்துள்ளார். பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து குளியலறையில் நேற்று குழந்தையை பெற்றெடுத்த பெண், பின் அதை தெருவில் வீசியுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா அல்லது தகாத முறையில் குழந்தை பிறந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். உடற்கூராய்வுக்கு பின்னரே, குழந்தை இறந்து பிறந்ததா அல்லது உயிருடன் பிறந்ததா என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.