'சயனைட்' மண்ணில் தங்கம் எடுக்கும் பணி தங்கவயல் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு
'சயனைட்' மண்ணில் தங்கம் எடுக்கும் பணி தங்கவயல் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு
ADDED : ஜூன் 22, 2024 04:45 AM

தங்கவயலில் உள்ள, 'சயனைட்' கழிவு மண்ணில் தங்கம் உட்பட கனிமங்களை எடுக்க மத்திய அரசு முறைப்படி, மாநில அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ளது. இதனால் 23 ஆண்டுகளாக முடங்கி கிடந்த தங்கம் எடுக்கும் பணிக்கு புது உற்சாகம் கிடைத்துள்ளது.
தங்கச்சுரங்கத்தில் இறங்கி, பாறைகளை பிளந்து, தங்கம் எடுக்கும் தொழிலில், 'உள்ளே போனால் பிணம்; மேலே வந்தால் பணம்' என்ற நிலையில், ஐந்து தலைமுறையாக பலரும் உழைத்தனர். 5,000க்கும் அதிகமானோர் விபத்தில் இறந்தும், உடல் அங்கங்களை இழந்தும், வியர்வை சிந்தி உழைத்த உழைப்பின் அடையாளம் தான் இந்த, 'சயனைட்' மண் கழிவு.
தங்கவயலில் 13 இடங்களில் மலை போல் கொட்டி வைத்துள்ள சயனைட் மண்ணில் பதுங்கி கிடக்கும் தங்கத்தை எடுக்கும் பணிக்கு மத்திய அரசு கோரிய அனுமதிக்கு, கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தங்கவயலின் சாதக, பாதகங்கள் குறித்து தங்கவயல் பிரமுகர்கள் தெரிவித்த கருத்துகள்:
* மிக தாமதமான முயற்சி
தங்கச் சுரங்கம் சயனைட் மலையில் பல கோடி ரூபாய் மதிப்பில் தங்கம் உள்ளதாக பல ஆண்டுகளுக்கு முன்பே தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறினர். சயனைட் மண்ணை சுத்திகரிப்பு செய்ய, காலதாமதமாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சுரங்கத் தொழிலை மூடுவதற்கு முன்பாகவே இத்திட்டத்தை நிறைவேற்றி இருந்தால், இழப்பே இல்லாமல் மேலும் 10 ஆண்டுகள் தங்கம் எடுத்திருக்க முடியும்.
- - தாடி அன்பழகன்,
கோல்குண்டா சுரங்கத் தொழிலாளி
போராட்டக்குழு
***
* உத்தரவாதம் தேவை
சயனைட் மண்ணை சுத்திகரிப்பு செய்யும் தொழிலை, தங்கவயலிலேயே செய்ய வேண்டும். எங்கள் பாட்டன் காலத்தில் இருந்து எங்களின் காலம் வரை உழைப்பில் உருவானதன் அடையாளம் தான் சயனைட் மலை. இங்கு, தொழிலாளர் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். சயனைட் மண் துாசியால் சுகாதார சீர் கேடு ஏற்படாது என்பதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
- - பெருமாள்,
ஹெட்கர் ஷாப்ட் சுரங்க தொழிலாளி.
***
* பிறப்பிடம் பாதுகாப்பு
தங்கச் சுரங்கத்தில் பாறைகளை பிளக்க, வெடி வைத்து துளையிட்ட போது ஏற்பட்ட துாசியால் தொழிலாளர்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது. நுரையீரல் பாதித்து பொத்தல் ஆனதுடன், 'சிலிகாசிஸ்' என்ற நோய் ஏற்பட்டு கொடுமை அனுபவித்திருக்கிறோம். துாசி பரவலால் ஏற்படும் நோய்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பிறப்பிடம் அழியாமல் பாதுகாக்க வேண்டும்.
- - விஷ்ணுகாந்தன்,
பிசாநத்தம், இங்க் லைன் சுரங்க தொழிலாளி
***
* பொருளாதார வளர்ச்சி
தங்கச் சுரங்க சயனைட் மண்ணில் 25,000 கோடி ரூபாய் மதிப்பில் தங்கம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தங்கத்தை பிரித்தெடுப்பதில் கூடுதல் செலவாகும் என யாரும் கூறவில்லை. இதற்கு தண்ணீர் தான் மிக அவசியம். சுரங்கத்தினுள் உள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும். சுரங்க தண்ணீர் காலி செய்யப்பட்டால் சுரங்கத்திலும் தங்கம் உற்பத்தி செய்யலாம். வேலை இல்லா திண்டாட்டம் ஒழியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
- - வக்கீல் ஜோதிபாசு
தலைவர், ஏ.ஐ.டி.யு.சி., கோலார் மாவட்டம்
***
* விவசாயம் பாதிக்க கூடாது
எனது தாத்தா ஆரோக்கியசாமி, சுரங்கத்தில் வெடி வைக்கும் பிரிவில் சூப்பர்வைசர். சிலிகாசிஸ் நோய் ஏற்பட்டு இருமலால் துன்பம் அனுபவித்தவர். சயனைட் துாசி நச்சுத்தன்மை வாய்ந்தது. மெல்ல உயிரை கொல்லும். அரசுகளின் திட்டங்கள் மக்களுக்கு பயன் தர வேண்டும். துாசி பரவலால் பயிர்கள் எல்லாம் நாசமானதாக விவசாயிகளும் போராட்டம் நடத்தி உள்ளனர். பாதிப்பு இல்லாமல் தொழில் நடக்க வேண்டும்.
- - மதலைமுத்து
சுரங்கத் தொழிலாளி வாரிசு
சாம்பியன் ரீப்
****
* விரைந்து அமல்படுத்துக!
தங்கச்சுரங்க தொழிலாளர்களுக்காக பல போராட்டம் நடத்தி இருக்கிறோம். சயனைட் மண்ணில் தங்கம் இருப்பதை, ஆய்வு செய்து மத்திய அரசின் கவனத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு சென்றோம். தங்கம் எடுக்கும் தொழிலை உடனடியாக துவங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இத்திட்டத்தை வரவேற்கிறோம். இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.
- - சீனிவாசன்
பொதுச் செயலர், சி.ஐ.டி.யு., சங்கம்
***
* வாரிசுகளுக்கு வேலை
மத்திய அரசு, சயனைட் மண் மலை மீது கவனம் செலுத்தி உள்ளது. மத்திய அரசு தங்கச் சுரங்க தொழிலை கைவிட்ட பின், மாநில அரசிடம் ஒப்படைக்க முன் வந்ததை பரிசீலனை செய்திருக்கலாம். சாக்கு போக்கு சொல்லி கை விட்டனர். சயனைட் மண் சுத்திகரிப்பு பணிகள் தங்கவயலிலேயே நடக்க வேண்டும். தொழில் வளம் பெருக வேண்டும். தங்கச் சுரங்க தொழிலாளர் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
- - சாரங்கபாணி, முன்னாள் தொழிலாளி
கில்பர்ட்ஸ் ஷாப்ட் சுரங்கம்
***