மணிக்கணக்கில் காக்க வைத்தனர் அங்குமிங்கும் அலையவிட்டனர்... புகார் சொன்னது யார் தெரியுமா?
மணிக்கணக்கில் காக்க வைத்தனர் அங்குமிங்கும் அலையவிட்டனர்... புகார் சொன்னது யார் தெரியுமா?
UPDATED : மே 07, 2024 04:07 AM
ADDED : மே 07, 2024 04:06 AM

புதுடில்லி: தமிழகத்தில் மணல் குவாரிகளில், அனுமதி அளித்த அளவை விட அதிகமாக மணல் எடுத்தது தொடர்பாக நடந்த பணமோசடி குறித்து, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், தமிழகத்தின் ஐந்து மாவட்ட கலெக்டர்களிடம் விசாரிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர்கள் ஆஜராகாமல் இருந்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கலெக்டர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. விசாரணைக்கு ஆஜராகும்படியும் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் பீலா திரிவேதி, பங்கஜ் மிட்டல் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதிட்டதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தின் வேலுார், திருச்சி, கரூர், தஞ்சாவூர் மற்றும் அரிய லுார் ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்கள், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜராகினர். ஆனால், காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை, அவர்களை தங்களுடைய அலுவலகத்தில் காத்திருக்க வைத்துள்ளனர். மேலும், விசாரணை நடக்கும் இடம் தொடர்பாக அலைக்கழித்துள்ளனர். இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதையடுத்து, 'மாவட்ட கலெக்டர்களுக்கு வேறு பணிகளும் உள்ளன. அவர்களை வீணாக காத்திருக்க வைக்கக்கூடாது. அனாவசியமாக அவர்களை துன்புறுத்துவதோ, அலைக்கழிப்பு செய்யவோ கூடாது' என, அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.