ADDED : ஜூன் 29, 2026 05:40 AM
சொல்கிறார்கள்/ 30/06/26 செவ்வாய் இதழ்
––––––––
அவள் விகடன்/ 02/06/2026 இதழ்/ பக்: 70
–––––––––––––––––––
‘குடும்ப தொழிலாகி
கோடிகளில் வருமானம்
தரும் சாலை பணி’
–––––––––––––––––––
மஹாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, ‘ஏ.எம்., சுவாமி கன்ஸ்ட்ரக் ஷன்’ என்ற நிறுவனத்தின் இயக்குநரான தமிழ் பெண், ராமலம்மாள்:
எனக்கு திருமணமானபோது, என் கணவர் மும்பையில் கட்டுமான நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் முகவராக வேலை செய்து கொண்டிருந்தார். ஒரே நேரத்தில் பல இடங்களில் வேலைகள் நடக்கும். ஒவ்வொரு இடத்திலும் வேலையை கவனிக்க, பொறுப்பாளர் ஒருவரையும் நியமித்திருந்தார்.
ஆனால், பொறுப்பாளர்கள் அனைவரும், அந்தத் தொழிலை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர்; இதனால், கணவருக்கு தொழிலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவருக்கு உதவியாக நானும் கட்டுமான தொழிலில் இறங்கினேன்.
என் கணவர் படிப்படியாக சொந்தமாக வேலைகளை எடுத்து செய்ய ஆரம்பித்தார். நவி மும்பை பகுதியில் சாலைகள் அமைக்கும் ஒப்பந்தங்களை எடுத்து செய்து வந்தோம். ஏற்கனவே பொறுப்பாளர்களை நம்பி ஏமாந்த அனுபவம் இருந்ததால், இம்முறை நானும், கணவரும் மட்டும் வேலைகளை கவனித்துக் கொண்டோம்.
கடந்த 1994ல் சாலைகள் அமைக்க தேவையான தார் கலவை தொழிற்சாலையும், சிமென்ட் கலவை தயாரிக்கும் தொழிற்சாலையையும் அடுத்தடுத்து ஆரம்பித்தோம். இன்றைக்கு எங்களுக்கு மஹாராஷ்டிரா முழுக்க சாலை பணிகள் நடக்கின்றன.
பிடித்த வேலை என்பதால், அதில் உள்ள சிரமங்களையோ, சவால்களையோ பெரிதுபடுத்துவதில்லை. தினமும் எட்டு மணி நேரத்துக்கும் மேல் சாலை ஓரம் நின்று, வேலை செய்ய பழகி இருக்கிறேன்.
கணவருக்கு உறுதுணையாக, நான் இந்த தொழிலில் இறங்கிய பின்தான், மிகப் பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறோம். இப்போது, எங்கள் மகனும் இந்த தொழிலை கவனித்து வருகிறான். லட்சங்களில் வருமானம் பார்த்துக் கொண்டிருந்த நாங்கள், இன்று கோடிகளில் சம்பாதிக்கிறோம்.
இது அத்தனையும் கடும் உழைப்பால் மட்டுமே சாத்தியமானது. மற்ற ஒப்பந்ததாரர்கள் நிராகரித்த வேலையையும் நாங்கள் எடுத்து, திறம்பட முடித்து கொடுக்கிறோம். இதனால், நவி மும்பை மாநகராட்சி நிர்வாகமும், எங்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறது.
***
