தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


ADDED : ஜூலை 05, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 04:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

––––––––––––––––

‘நம் நம்பிக்கையே

நம் பிரச்னைக்கு

தீர்வு!’

–––––––––––––––

கை, கால்களை இழந்தும் தளராமல் போராடி விளையாட்டு துறையில் சாதித்து வரும், பெங்களூரை சேர்ந்த, ஷாலினி சரஸ்வதி:

பெங்களூரில் பிறந்து வளர்ந்தேன். கவலை என்றால் என்னவென்று தெரியாத வாழ்க்கை அது. ஆனால், அந்த மகிழ்ச்சி கடவுளுக்கே பொறுக்கவில்லை போல... என் வாழ்க்கையுடன் விளையாடி பார்க்க நினைத்தார். 2012ல் கம்போடியா நாட்டுக்கு சுற்றுலா சென்று வந்ததும், லேசான காய்ச்சல் வந்தது. மருத்துவரை பார்த்தும் சரியாகவில்லை.

அவர்களால் என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நோய் தீவிரமாகி, உடல் உறுப்புகள் செயலிழக்க ஆரம்பித்தன. கடைசியாக, அரிய வகை கிருமி தொற்று என்று மருத்துவர்கள் கண்டுபிடித்து, ‘பிழைப்பது கஷ்டம்’ என்று கையை விரித்தனர். கிருமி தொற்றால், கை, கால்களை அகற்றினர். இரண்டு ஆண்டுகள் படுக்கையிலேயே இருந்தேன்.

அழுது அழுது கண்ணீரும் வற்றி போன நிலையில், திடீரென ஒருநாள், இனி எதற்காகவும் கலங்க கூடாது; நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

மருத்துவர்கள் ஆலோசனையுடன், ‘பிளேடு’ எனப்படும் கம்பிகளால் ஆன செயற்கை கால்களை பொருத்தி கொண்டேன். படுத்த படுக்கையாக இருந்ததில் உடல் எடை மிகவும் அதிகரித்திருந்தது. பயிற்சியாளர் உதவியுடன் நடக்க பழகினேன். நடப்பதற்காக விளையாட்டு மைதானத்திற்கு சென்றேன். ஒரு கட்டத்தில், அதுவே விளையாட்டின் மீதான ஆர்வமாக மாறியது.

ஓட வேண்டும் என்று ஆசைப்பட்டபோது, கம்பிகளை பொருத்தி கொண்டால் தான் ஓட முடியும் என்ற வாய்ப்பு மட்டுமே இருந்தது. அப்படி ஓடுவது மரண வலி. ஆனால், எனக்கு வலி புதிதல்ல என்பதால், அதையும் சகித்து கொண்டு ஓட ஆரம்பித்தேன். தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில், ‘பிளேடு ரன்னர்ஸ்’ இருந்தனர் என்று அப்புறம் தான் தெரியவந்தது.

தொடர்ந்து மிக கடுமையான பயிற்சிகள் எடுத்தேன். சோர்ந்து போகும்போதெல்லாம், ஜெயித்தே ஆக வேண்டும் என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொள்வேன்.

கடந்த 2017, 18, 19ம் ஆண்டுகளில் நடந்த தேசிய தடகள போட்டிகளில் பங்கேற்று, வெண்கலம், வெள்ளி மற்றும் தங்கப் பதக்கங்கள் ஜெயித்தேன். 2023ல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஓட தகுதி பெற்றதை பெரிய சாதனையாக நினைக்கிறேன். இந்தியாவில், கம்பிகளால் ஆன கால்கள் பொருத்தப்பட்ட முழு நேர பந்தய வீராங்கனை நான் மட்டுமே!

எல்லார் வாழ்விலும் கஷ்டம் நிச்சயம் இருக்கும். இந்த வாழ்க்கை மீது நாம் வைக்கும் நம்பிக்கை தான், பிரச்னைகளுக்கான தீர்வாக அமையும். உயிருடன் இருப்பதே உன்னதமான விஷயம் தான். எனவே, ஒரு நொடியை கூட வீணாக்காதீர்கள்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us