ADDED : ஜூன் 27, 2024 06:47 AM

தங்கவயல் : ''திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டும்,'' என, தங்கவயல் தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசன் வலியுறுத்தினார்.
தங்கவயலில் திருவள்ளுவர் சிலை நிறுவி 38 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழ் சங்க செயல் தலைவர் கமல் முனிசாமி வரவேற்றார்.
புரவலர் அனந்த கிருஷ்ணன் முன்னிலையில் தலைவர் கலையரசன் தலைமையில் மாலை அணிவித்து, திருக்குறள் ஓதும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது கலையரசன் பேசியதாவது: தங்கவயலில் தங்கச் சுரங்க நிறுவனத்தார், திருவள்ளுவர் சிலை நிறுவுவதற்கு இந்த நிலத்தை வழங்கினர். இதற்காக பல இடையூறுகள் ஏற்பட்டன. அவற்றை எல்லாம் கடந்து 38 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் சிலை இங்கு நிறுவப்பட்டது.
இதன் ஆண்டு விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறோம். திருவள்ளுவர் சிலை நிறுவிய போதிருந்தே திருக்குறளை தேசிய நுாலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரி வருகிறோம்.
திருக்குறளில் ஜாதி, மதம், மொழி, என எதையும் சாராமல், மனித வாழ்வுக்கு ஏற்ற பொது நுாலாக உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கூட பல இடங்களில் திருக்குறளின் பெருமையை கூறி வருகிறார். அவர் தலைமையில் இயங்கும் மத்திய அரசு, திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அன்பு, சாரங்கபாணி, நடராஜன், ஆர்.வி.குமார், கோபி ஏகாம்பரம் உட்பட பலர் உரையாற்றினர். நித்தியானந்தம், தீபம் சுப்ரமணியம், பெருமாள், சேகர், வக்கீல் ஸ்ரீதர், திருமுருகன், கருணா, முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.