அரசு பணிக்கு அருள் புரியும் தொம்லுார் சூரிய நாராயணா கோவில்
அரசு பணிக்கு அருள் புரியும் தொம்லுார் சூரிய நாராயணா கோவில்
ADDED : ஜூலை 01, 2024 09:18 PM

பொதுவாக மனிதர்கள் தங்களின் வாழ்வில் கடைசி வரை எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்க, ஒரு நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைப்பர்.
அதிலும் குறிப்பாக அரசு பணி கிடைக்க வேண்டும் என்றே பெரும்பாலானோர் விரும்புவர். இதற்காக கோவில் கோவிலாக சென்று, கடவுளிடம் மனம் உருகி வேண்டுவர்.
பெங்களூரில் ஒரு கோவிலில் சாமி தரிசனம் செய்தால், அரசு வேலை கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். அந்த கோவிலை பற்றி பார்க்கலாம்.
பெங்களூரு தொம்லுார் அமரஜோதி லே- - அவுட்டில் உள்ளது சூரிய நாராயணா கோவில். அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்து, இந்த கோவிலில் வழிபட்டால், கண்டிப்பாக வேலை கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
அரசு வேலை மட்டும் இன்றி, அரசிடம் இருந்து சலுகைகள் கிடைக்க வேண்டும் என்றும் இக்கோவிலில் வழிபாடு நடத்துகின்றனர்.
சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலின், ஐந்து அடுக்கு ராஜகோபுரம் கோவிலுக்கு அழகு சேர்க்கிறது. குதிரைகள் பூட்டிய தாமரை தேரில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி கருவறையில் பக்தர்களுக்கு, சூரிய நாராயணா அருள்பாலிக்கிறார்.
சப்தமி அன்று செந்தாமரை மலரால், சூரிய நாராயணாவுக்கு அர்ச்சனை நடக்கிறது. ஞாயிறுதோறும் காலையில் கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது.
கோவிலுக்குள் பஞ்சமுக விநாயகர், கோதண்டராமர், பிரம்மா, சரஸ்வதி, நரசிம்மர், லட்சுமி, வைஷ்ணவி சன்னிதிகள் உள்ளன. ராமாயணம், மகாபாரத காலத்து ஓவியங்களும், தசாவதாரம், அஷ்டலட்சுமி, மீனாட்சி திருக்கல்யாண சிற்பங்களும், கோவில் பிரகாரத்தில் உள்ளன.
இந்த கோவிலின் நடை தினமும் காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 5:30 முதல் இரவு 8:30 மணி வரையும் திறந்திருக்கும். மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, தொம்லுாருக்கு பி.எம்.டி.சி., பஸ் சேவை உள்ளது.
சிறப்பு அலங்காரத்தில் சூரிய நாராயணா.
- நமது நிருபர் -