ADDED : ஜூன் 27, 2024 01:46 AM
துவாரகா: அதிக வருமானம் தருவதாகக்கூறி பெண்ணிடம் 10.30 லட்ச ரூபாய் மோசடி செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெலிகிராம் என்ற சமூக வலைதள செயலி வாயிலாக ஆன்லைன் முதலீடு குறித்த அறிவிப்பை டில்லி பெண் ஒருவர் பார்த்தார். இதையடுத்து அதில் இடம்பெற்றிருந்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.
அதில் பேசியவர்கள் அதிக லாபம் கிடைக்குமென ஆசை வார்த்தை கூறினர். அதன்படி, வங்கிக்கணக்கு துவங்கி, 10.30 லட்ச ரூபாய் முதலீடு செய்தார். நாளடைவில் பணம் முழுவதையும் இழந்தது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், துவாரகா சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்த மோசடியின் முக்கிய புள்ளிகளாக இருந்த விபின் குமார், 30, மோகித் சர்மா, 27, ஸ்மார்த் தபர், 23, ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.