ADDED : மே 29, 2024 05:44 AM

எலஹங்கா, : ஊர் பெயர் பலகையில் இருந்த வீர் சாவர்க்கர் பெயரை கருப்பு மை பூசி அழித்த, இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு, எலஹங்கா டெய்ரி சதுக்கம் அருகில் உள்ள மேம்பாலத்திற்கு, சுதந்திர போராட்ட வீரரான வீர்சாவர்க்கர் பெயர், முந்தைய பா.ஜ., ஆட்சியில் சூட்டப்பட்டது. இதற்கு, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், அந்த மேம்பாலத்திற்கு நேற்று மதியம், இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் சென்றனர். மேம்பாலத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பெயரை சூட்டும்படி கோஷம் எழுப்பினர்.
மாணவர் ஒருவர், மேம்பாலத்தில் இருக்கும் பெயர் பலகை மீது ஏறினார். அதில் எழுதப்பட்டிருந்த, சாவர்க்கர் பெயரை கருப்பு மை பூசி அழித்தார். அந்த வழியாக சென்ற வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி அறிந்த எலஹங்கா நியூ டவுன் போலீசார் அங்கு சென்று, மாணவர் சங்கத்தின் பிரவீன், ரக் ஷா ராஜ், சிஷாக் கவுடா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மற்றவர்கள் அங்கிருந்து சென்றனர்.
இது பற்றி தெரிந்ததும், எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் தலைமையில், பா.ஜ.,வினர் அங்கு கூடினர். காங்கிரஸ் அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
''எனது தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர்கள் படங்கள் உள்ளன. நாங்கள் கருப்பு மை பூசவில்லை. சாவர்க்கரின் வரலாற்றை, காங்கிரஸ் தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெயர் மீது கருப்பு மை பூசிய, மேலும் சிலரை விரைவில் கைது செய்ய வேண்டும்,'' என, எம்.எல்.ஏ., விஸ்வநாத் கூறினார்.