100 திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த மூவர் கைது
100 திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த மூவர் கைது
ADDED : ஜூன் 11, 2024 03:50 PM
சப்ஜி மண்டி: டில்லியில் மட்டும் 100 திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பல், டில்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
டில்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலின் மூளையாக செயல்பட்டு வந்த ஒருவனை பற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் நரேலாவில் ஒரு பகுதியில் போலீசார் தொடர்ந்து மாறு வேடத்தில் சுற்றி வந்தனர். பல நாட்கள் காத்திருத்தலுக்குப் பிறகு ஜாஹித் அலி, 45, என்பவரை பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அவரது கூட்டாளியான அதே பகுதியைச் சேர்ந்த ஆசாத், 27, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் இருவருடன் இணைந்து திருடி வந்த அபிஷேக், 24, என்பவர் ஒரு திருட்டு வழக்கில் கைதாகி, உத்தர பிரதேசத்தின் தஸ்னா சிறையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த மூன்று பேர் கும்பல், டில்லியில் மட்டும் 100க்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. வீடு புகுந்து திருடுவது, இருசக்கர வாகனங்களை திருடுவது, கடைகளில் திருடுவது என, இவர்கள் மீது மூன்று மாநிலங்களிலும் ஏராளமான திருட்டு வழக்குகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.