ADDED : பிப் 23, 2025 01:16 AM

மூணாறு:இடுக்கி மாவட்டம் ராஜாக்காடு அருகே பன்னியாறுகுட்டி பகுதியில் நூறடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து கணவன், மனைவி உள்பட மூன்று பேர் இறந்தனர்.
பன்னியாறுகுட்டி பகுதியில் வசிப்பவர் போஸ் 59, இவரது மனைவி ரீனா 55. இவர், ஒலிம்பிக் வீராங்கனை பீனா மோளின் சகோதரியாகும். போஸ், ரீனா ஆகியோர் நேற்று முன்தினம், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் ஆப்ரகாம் 75, ஜீப்பில் ஜோஸ்கிரி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். ஆப்ரகாம் ஜீப்பை ஓட்டினார்.
ஜோஸ்கிரி சென்று விட்டு திரும்புகையில் பன்னியாறுகுட்டி பகுதியில் உள்ள சர்ச் அருகே இரவு 10:30 மணிக்கு வந்தபோது குறுகலான கான்கிரீட் ரோட்டில் கடும் இறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் நூறடி பள்ளத்தில் கவிழ்ந்தது. பாறைகள் உருண்டும், மரம் முறிந்தும் விழுந்து ஜீப் உருக்குலைந்தது. அப்பகுதி மக்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். போஸ், ரீனா ஆகியோர் சம்பவ இடத்தில் இறந்தனர்.
பலத்த காயமடைந்த ஆப்ரகாமை ராஜாக்காட்டில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்கு எர்ணாகுளம் கொண்டு சென்றபோது வழியில் இறந்தார்.

