ADDED : செப் 12, 2024 01:07 AM
மும்பை, மஹாராஷ்டிராவில் அண்ணன், அவரது கர்ப்பிணி மனைவி, மற்றும் மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை தம்பி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தின் கர்ஜத் தாலுகாவில் உள்ள கலம்ப் கிராமத்தை சேர்ந்தவர் மதன் பாட்டீல், 40. இவரது மனைவி, ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த தம்பதிக்கு 11 வயதில் மகன் இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 8ம் தேதி வீட்டின் பின்புறம் மதன் பாட்டீல் உட்பட மூவரும் தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தனர்.
இது பற்றி அறிந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொலை குறித்து விசாரித்த போலீசார் கூறியதாவது:
சொத்து தகராறில் அண்ணன், மைத்துனி, அவர்களது மகன் ஆகிய மூவரையும் தம்பி ஹனுமந்த் பாட்டீல் கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் கொலைக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் விநாயகர் சதுர்த்தி விழா நடக்கும் பந்தலில் விடிய, விடிய ஹனுமந்த் பாட்டீல் இருந்துள்ளார்.
எனினும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஹனுமந்த் குற்றவாளி என்பதை கண்டறிந்து கைது செய்தோம். அவரிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.