காலம் கைகொடுக்கவில்லை: விரக்தியில் வினேஷ் போகத் மவுனம் கலைத்தார்
காலம் கைகொடுக்கவில்லை: விரக்தியில் வினேஷ் போகத் மவுனம் கலைத்தார்
UPDATED : ஆக 17, 2024 02:34 AM
ADDED : ஆக 17, 2024 02:25 AM

புதுடில்லி: காலம் எனக்கு கை கொடுக்கவில்லை என் விதியும் தான் என ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் எதி்ர்பார்த்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விரக்தியுடன் தெரிவித்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்த போட்டியில் 'பிரீஸ்டைல்' 50 கிலோ பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத், 29, பைனலுக்கு முன்னேறியும், எடை கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வெள்ளி பதக்கம் கோரி சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் இவரது முறையீடு மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டு இறுதியில் தள்ளுபடி ஆனது. இதனால் விரக்தி அடைந்தார்.
இது குறித்து ‛எக்ஸ்' தளத்தில் கூறியது,
இந்த ஒலிம்பிக்கில் நம் தேசிய கொடியை உயரே பறக்க வைக்க வேண்டும் அதனுடன் என்னுடைய புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதும் எனது விருப்பமாக இருந்தது.
சொல்ல இன்னும் வார்த்தைகள் நிறைய இருக்கிறது. ஆனால் அவற்றை சொல்ல இப்போது போதுமானதாக இருக்காது. நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் பேசுவேன். எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி கடிகாரம் நின்றுவிட்டது,
காலம் கைகொடுக்கவில்லை. என்னுடைய விதியும்தான். எனக்குள் இருக்கும் போராட்டமும், மல்யுத்தமும் எப்போதும் அப்படியேதான் இருக்கும். தொடர்ந்து எப்போதும் போராடுவேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

