இன்று சர்வதேச ஜனநாயக தினம்: 25 லட்சம் பேர் பங்கேற்கும் மனித சங்கிலி
இன்று சர்வதேச ஜனநாயக தினம்: 25 லட்சம் பேர் பங்கேற்கும் மனித சங்கிலி
ADDED : செப் 14, 2024 11:39 PM
பெங்களூரு: சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு, சமூக நலத்துறை சார்பில், பீதர் முதல், சாம்ராஜ்நகர் வரை, 2,500 கி.மீ., துாரத்துக்கு, இன்று மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொண்டு சாதனை படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா, பெங்களூரில் நேற்று கூறியதாவது:
ஆண்டுதோறும் செப்டம்பர் 15ம் தேதி, சர்வதேச ஜனநாயக தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வகையில், இந்தாண்டு கர்நாடகாவில் புதிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தின் 31 மாவட்டங்களையும் இணைக்கும் வகையில், பீதரில் இருந்து சாம்ராஜ்நகர் வரை, 2,500 கி.மீ., துாரத்துக்கு மனித சங்கிலி அமைத்து, ஜனநாயகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள், தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் உட்பட பல்வேறு துறையினர் என 25 லட்சம் மக்கள் பங்கேற்க உள்ளனர். இன்று காலை 9:00 மணிக்கு, பெங்களூரு விதான் சவுதா முன், முதல்வர் சித்தராமையா துவக்கி வைப்பார்.
இதே நேரத்தில், அனைத்து மாவட்டங்களிலும் மனித சங்கிலி அமைக்கப்படும். இதன் மூலம் புதிய உலக சாதனை படைக்கப்படும்.
அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.