இன்று போர் ஒத்திகை மாநகர் முழுதும் பாதுகாப்பு அதிகரிப்பு ராணுவம், துணை ராணுவம் குவிப்பு
இன்று போர் ஒத்திகை மாநகர் முழுதும் பாதுகாப்பு அதிகரிப்பு ராணுவம், துணை ராணுவம் குவிப்பு
ADDED : மே 06, 2025 08:41 PM

புதுடில்லி:நாடு முழுதும் இன்று நடக்கும் போர் ஒத்திகையை முன்னிட்டு, தலைநகர் டில்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப். 22ம் தேதி சுற்றுலா பயணியர் மீது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, இந்தியா - -பாகிஸ்தான் போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுதும் இன்று போர் ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்தும், தலைநகர் டில்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்கள், மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலீஸ், ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தி ரோந்து சுற்றி வருகின்றனர்.
கன்னாட் பிளேஸ், இந்தியா கேட், ஜன்பத், யஷ்வந்த் அரண்மனை, கோல் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
டில்லி மாநகரப் போலீசின் கிழக்கு மாவட்ட துணைக் கமிஷனர் அபிஷேக் தானியா, “டில்லி மாநகர் முழுதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அசம்பாவிதங்கள் தடுக்கப்படும். போலீசுடன் மக்கள் இந்த நேரத்தில் ஒத்துழைக்க வேண்டும்,”என்றார்.
தென்மேற்கு மாவட்ட துணைக் கமிஷனர் சுரேந்திர சவுத்ரி, “கண்காணிப்பை அதிகரிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ரோந்துப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மாநகரின் சட்டம் - ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருக்கிறது,”என்றார்.
டில்லி மாநகரப் போலீசின் உயர் அதிகாரிகள், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தொடர்பாக விரிவான திட்டங்களைத் தயாரிக்க துணைக் கமிஷனர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல, ரோந்துப் பணியை வலுப்படுத்த துணைக் கமிஷனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பஹல்காமிம் தாக்குதல் நடந்த நாளில் இருந்தே டில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இரவு, பகல் என 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
ஹரியானா மற்றும் உத்தர பிரதேச எல்லைகளில், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். உதவி கமிஷனர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டேஷன்களின் இன்ஸ்பெக்டர்களிடன் அடிக்கடி தொடர்பு கொண்டு நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர்.
மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் பைக்குகளில் ரோந்து செல்கின்றனர். அந்தப் பகுதிகளில் சிறப்பு சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்படுகிறது.
வாடகை மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டில்லியில் இன்று நடக்கும் போர் ஒத்திகையில் போலீஸ், ராணுவம், துணை ராணுவம் வெடிகுண்டு செயலிழப்பு படை, மோப்ப நாய் படை, தீயணைப்புப் படை, பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்டவை பங்கேற்கின்றன.
பாலிகா பஜார், ஜன்பத், கான் மார்க்கெட் மற்றும் அரசு அலுவலக கட்டடங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இன்று போர் ஒத்திகை நடத்தப்படுகிறது.
பஞ்சாப்:
பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலத்தில் பெரோஸ்பூர், லூதியானா, அமிர்தசரஸ், பதிண்டா, குருதாஸ்பூர், ஹோஷியார்பூர், ஜலந்தர், பாட்டியாலா, பதான்கோட், பர்னாலா மற்றும் மொஹாலி உட்பட 20 இடங்களில் இன்று போர் ஒத்திகை நடத்தப்படுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும், மத்திய உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்படி செய்யப்பட்டுள்ளன.
மேலும், நேற்று இரவு 7:00 மணி முதல் 7:15 மணி வரை பாதுகாப்பு சைரன்கள் ஒலிக்க விடப்பட்டன. இன்று இரவு 9:00 மணி முதல் 9:30 மணி வரை மின் தடை ஒத்திகை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹரியானா:
அதேபோல, ஹரியானா மாநிலத்தில் அம்பாலா, பரிதாபாத், குருகிராம், ஹிசார், பஞ்ச்குலா, பானிபட் மற்றும் ரோஹ்தக் உட்பட பல இடங்களில் போர் ஒத்திகை இன்று நடக்கிறது.
விமானப் படையுடன் ஹாட்லைன் மற்றும் ரேடியோ- தொடர்பு இணைப்புகளை செயல்படுத்துதல், கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் நிழல் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாட்டை சோதித்தல் ஆகியவையும் போர் ஒத்திகையில் இடம்பெறும்.