பூக்கள், பழ மாலைகளுக்கு 'டிமாண்ட்' வரத்து குறைவால் வியாபாரிகள் கவலை
பூக்கள், பழ மாலைகளுக்கு 'டிமாண்ட்' வரத்து குறைவால் வியாபாரிகள் கவலை
ADDED : ஏப் 12, 2024 05:37 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தல் காரணமாக, பூ, பழங்கள் மாலைகளுக்கு 'டிமாண்ட்' ஏற்பட்டுள்ளது. விற்பனை அமோகமாக நடக்கிறது. ஆனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், விளைச்சல் குறைந்துள்ளது.
தேர்தல் என்றால், பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மைக் பொருத்துவோர், கோஷம் போடுவோர், ஷாமியானா டென்ட் வாடகைக்கு விடுவோர் என, பலருக்கும் டிமாண்ட் ஏற்படுவது வழக்கம். அதே போன்று பூமாலைகளுக்கும் மவுசு அதிகரிக்கும். இம்முறை லோக்சபா தேர்தலுக்கும் பூமாலைகள் விற்பனை அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்கள், கொளுத்தும் வெயிலுடன் போட்டி போடும் வகையில், அனல் பறக்க பிரசாரம் செய்கின்றனர். தேர்தல் பிரசாரத்துக்கு வரும் தலைவர்களை பூமாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்.
பூங்கொத்து, பூமாலைகளுக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. பலவிதமான பூக்கள், பழங்களின் மாலைகளுக்கும் தேவை அதிகரித்துள்ளது.
இதற்கு முன் மாநில மற்றும் தேசிய அளவிலான தலைவர்கள் வந்தால், பூங்கொத்து, பூமாலை அணிவித்து ஆர்ப்பாட்டமாக வரவேற்பது வழக்கம். ஆனால் இப்போது டிரென்ட் மாறிவிட்டது.
பிரசாரம், பேரணிக்கு வரும் தங்களுக்கு பிடித்தமான தலைவர்களுக்கு, வேட்பாளர்களும், தொண்டர்களும் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் பழங்களில் மாலைகள் தயாரித்து, அணிவித்து மகிழ்கின்றனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு இத்தகைய மாலைகள், ஏராளமாக அணிவிக்கப்பட்டன.
ஆப்பிள், சாத்துக்குடி, பாக்கு, சோளம் உட்பட பலவிதமான பழங்கள், பூக்களால் தயாரிக்கப்பட்ட மாலைகளை ஆதரவாளர்கள் அணிந்து மகிழ்வித்தனர். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கும் கூட, டன் கணக்கில் எடையுள்ள பழ மாலைகள் 'கிரேன்' மூலமாக அணிவிப்பது வழக்கம்.
வியாபாரிகள் காலை முதல் இரவு வரை, ஓய்வின்றி மாலைகள் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர். விலையை பற்றி பொருட்படுத்தாமல், அரசியல்வாதிகள் பிரமாண்டமான மாலைகளை வாங்கி செல்கின்றனர்.
இதற்கிடையில் பூக்களின் வரத்து குறைந்துள்ளதால், வியாபாரிகள் கவலையில் உள்ளனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால், பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. தேவைக்கு தகுந்தபடி பூக்கள் கிடைப்பதில்லை. இதனால், வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.

