ADDED : ஜூன் 16, 2024 11:13 PM

புதுடில்லி: பார்லிமென்ட் வளாகத்தின் முகப்பில் பிரமாண்ட காந்தி சிலை உட்பட அங்கிருந்த அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி, ஜோதிபா புலே உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள், பழைய பார்லிமென்ட் வளாகத்தின் 5ம் எண் நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள புல்வெளிக்கு இடம் மாற்றப்பட்டன.
அனைத்து சிலைகளையும் பார்வையாளர்கள் ஒரே இடத்தில் கண்டு, அத்தலைவர்கள் பற்றி அறிய வசதி யாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டதாக லோக்சபா செயலகம் விளக்கம் அளித்தது.
சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்ட பகுதியை துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர் நேற்று திறந்து வைத்தார்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், 'பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளை, ஆளும் மத்திய அரசு தன்னிச்சையாக வேறு இடத்துக்கு மாற்றியுள்ளது.
'இது, அமைதி மற்றும் ஜனநாயக ரீதியில் எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் போராட்டங்களை ஒடுக்கும் செயல்' என, குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள லோக்சபா முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லா, ''சிலைகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துகள் கேட்கப்பட்டன. அதன்பின், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை, காங்கிரஸ் அரசியலாக்கப் பார்க்கிறது,” என்றார்.