ADDED : ஜூன் 27, 2024 11:04 PM
பெங்களூரு: டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதால், பஸ் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கும்படி, வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகம், அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
கர்நாடகாவில் சக்தி திட்டம் என்ற பெயரில், பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டம் அமலில் உள்ளது. இதனால் அரசின் நான்கு போக்குவரத்து கழகங்களும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக சொல்லப்படுகிறது.
ஆனால், அரசு மட்டும் போக்குவரத்து கழகங்கள் லாபத்தில் இயங்குகிறது என்று கூறி வருகிறது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3.50 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியானது. இது குறித்து போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று, நான்கு போக்குவரத்து கழகங்களிடம் இருந்து இதுவரை கோரிக்கை வரவில்லை. கோரிக்கை வந்தால் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பரிசீலிப்போம்' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஹூப்பள்ளியை தலைமை இடமாக கொண்டு இயங்கும், வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகம், டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும்படி, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

