துங்கபத்ரா அணையின் ஷட்டர் உடைந்தது; கர்நாடகா, ஆந்திராவில் வெள்ள அபாயம்
துங்கபத்ரா அணையின் ஷட்டர் உடைந்தது; கர்நாடகா, ஆந்திராவில் வெள்ள அபாயம்
ADDED : ஆக 12, 2024 04:36 AM

கொப்பால் : கர்நாடக மாநிலம், கொப்பாலில் உள்ள துங்கபத்ரா அணையில் 19வது மதகின் ஷட்டர் உடைந்து, ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. அணையில் இருந்து அதிக தண்ணீர் வெளியேற்றப்படுவதால், கர்நாடகாவின் நான்கு மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் சில கிராமங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டம், முனிராபாத்தில் துங்கபத்ரா அணை உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 105.79 டி.எம்.சி., இதில், 32 மதகுகள் உள்ளன. கொப்பால், ராய்ச்சூர், பல்லாரி, விஜயநகர் ஆகிய நான்கு மாவட்டங்களின் குடிநீர், விவசாய தேவையை இந்த அணை பூர்த்தி செய்கிறது.
கடந்த மாதம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணை வேகமாக நிரம்பியது. நேற்று முன்தினம் இரவு 8:00 மணி நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 104.70 டி.எம்.சி., ஆக இருந்தது.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, 19வது மதகின் ஷட்டர் கதவை பிடித்து தாங்கும் இரும்பு சங்கிலி திடீரென அறுந்தது. இதனால், ஷட்டர் கதவு தண்ணீரில் விழுந்து அடித்து செல்லப்பட்டது. 19வது மதகு வழியாக, அணையில் இருந்து தண்ணீர் ஆற்றில் சீறிப்பாய்ந்தது.
துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான சிவகுமார், நேற்று மதியம் துங்கபத்ரா அணையில் ஆய்வு மேற்கொண்டார். பின், நீர்ப்பாசன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஷட்டர் கதவை சீரமைக்க சென்னை, ஹைதராபாதில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்படுகின்றனர்.
இதற்கிடையில், தடுப்பு கதவு இல்லாத மதகில் இருந்து, நேற்று மாலை வரை 35 டி.எம்.சி., தண்ணீர் வெளியேறியது.
ஒரு மதகு வழியாக தண்ணீர் வெளியேறினால், அணைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்று கருதி, மேலும் 27 மதகுகள் வழியாகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், துங்கபத்ரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
விஜயநகர் கம்ப்ளியில் ஆற்றின் குறுக்கே உள்ள, தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது. ஹம்பியில் உள்ள வரலாற்று நினைவுச் சின்னங்களும், மூழ்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
தண்ணீர் அதிகமாக வெளியேறுவதால், உடைந்த மதகில் கதவு பொருத்துவது, மிகவும் சிரமம் என கூறப்படுகிறது.
அணையில் இருந்து முழு தண்ணீரையும் வெளியேற்றிவிட்டு, கதவு பொருத்தலாம் என்று சில அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
ஆனால், முழு தண்ணீரையும் வெளியேற்றினால் நான்கு மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலையும் ஏற்படும்.
அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால், கொப்பால், ராய்ச்சூர், விஜயநகர், பல்லாரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கும், வெள்ள அபாயம் ஏற்பட்டு உள்ளது.