ADDED : மே 26, 2024 06:50 AM

உடுப்பி: அரபிக் கடலில் அலைகள் ஆர்ப்பரிப்பதால், செயின்ட் மேரிஸ் தீவுக்குச் செல்ல உடுப்பி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் பரவலாக கோடை மழை பெய்கிறது. அரபிக்கடலில் அலைகளின் ஆர்ப்பரிப்பு அதிகம் உள்ளது. இச்சூழ்நிலையில், கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சுற்றுலா வரும் இளைஞர்கள், அலைகளின் ஆர்ப்பரிப்பை பொருட்படுத்தாமல் நீரில் இறங்கி, அபாயத்தை தேடிக்கொள்கின்றனர்.
கடற்கரைகளில் உள்ள லைப் கார்டுகளின் எச்சரிக்கையையும், சுற்றுலா பயணியர் அலட்சியம் செய்கின்றனர். உடுப்பியின் மல்பே கடற்கரையிலும், இதே சூழ்நிலை உள்ளது.
மல்பே அருகில் உள்ள செயின்ட் மேரிஸ் தீவு, சுற்றுலா பயணியருக்கு விருப்பமான இடம். வித்தியாசமான வடிவங்களில் கற்பாறைகள் நிறைந்துள்ளன.
உடுப்பிக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர், செயின்ட் மேரிஸ் தீவுக்கு செல்கின்றனர். பாறைகளுக்கு நடுவிலும், பாறை மீதும் நின்று, போட்டோ, வீடியோ எடுக்கின்றனர். மழைக்காலத்தில் பாறைகளில் பாசி கட்டும். இதன் மீது நிற்பது அபாயமானது. தற்போது உடுப்பியில், பரவலாக மழை பெய்கிறது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயின்ட் மேரிஸ் தீவுக்குச் செல்ல, சுற்றுலா பயணியருக்கு உடுப்பி மாவட்ட நீர்வாகம் தடை விதித்துள்ளது. அடுத்த நான்கு மாதங்கள் வரை, தடை உத்தரவு அமலில் இருக்கும். இங்கு வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
மல்பே கடற்கரை, சீவாக் பகுதியில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது. தீவை காண வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
கடலில் ராட்சத அலைகள் எழுகின்றன. எனவே மீனவர்களும் கூட, கடலில் இறங்கக் கூடாது என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.