நகர முடியாமல் தவிக்கும் கவர்னர் காங்கிரசால் தொல்லை; ஜனாதிபதியிடம் புகார்
நகர முடியாமல் தவிக்கும் கவர்னர் காங்கிரசால் தொல்லை; ஜனாதிபதியிடம் புகார்
ADDED : செப் 07, 2024 12:53 AM

பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வரின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், முதல்வர் மீது விசாரணை நடத்த, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், கடந்த மாதம் 17ம் தேதி அனுமதி அளித்தார்.
இந்த விவகாரத்தில் கவர்னரை கண்டித்து, காங்கிரசார் மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தினர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் அந்நாட்டில் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா வீட்டை முற்றுகையிட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை அண்மையில் ஏற்பட்டது.
'இதேபோன்ற நிலைமை, கர்நாடக கவர்னருக்கும் ஏற்படும்' என காங்கிரஸ் எம்.எல்.சி., ஐவான் டிசோஜா மிரட்டல் விடுத்திருந்தார். கவர்னர் மாளிகை முற்றுகையிடும் போராட்டத்தையும் காங்கிரஸ் நடத்தியது.
இதையடுத்து, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது குற்றஞ்சாட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் சமீபத்தில் புகார் அறிக்கை அனுப்பியுள்ளார்.
கடிதம் குறித்து வெளியான தகவல்:
காங்கிரஸ் போராட்டத்தால், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
உளவுத்துறை ஆலோசனையின் அடிப்படையில் புல்லட் புரூப் கார் பயன்படுத்தத் துவங்கியுள்ளேன்.
ராஜ்பவன் மீது மாநில அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கிறது. மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தி, தன்னுடைய உருவப்படம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. கவர்னர் மாளிகைக்குள் நுழையும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை, மத்திய உள்துறை அமைச்சகத்தும் நீண்ட அறிக்கையாக கவர்னர் அனுப்பியுள்ளார்.