ADDED : மே 04, 2024 11:42 PM
கோழிக்கோடு: கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு பகலில் கடும் வெப்பம் நிலவும் நிலையில் மாநிலம் முழுதும் சமீப காலமாக மின் நுகர்வு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தின் பந்திரம்காவு பகுதியில் அடிக்கடி இரவில் மின் தடை ஏற்படு வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி இரவு பொதுமக்கள் சிலர் பந்திரம்காவு மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று அலுவலகத்தில் தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலக பொருட்கள் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தன.
இது தொடர்பாக மின்வாரிய ஊழியர் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதன்படி போலீசார் மின்வாரிய அலுவலகத்தின் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சேகரிக்கப்படும் ஆதாரங்கள் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை யார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.