ADDED : பிப் 27, 2025 10:25 PM

விக்ரம்நகர்:சட்டசபையின் துணை சபாநாயகராக, பா.ஜ.,வைச் சேர்ந்த ஆறு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த மோகன் சிங் பிஷ்ட், 67, தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிப்ரவரி 5ம் தேதி நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆம் ஆத்மி கட்சியின் ஒரு தசாப்த கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
தற்போது எட்டாவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மூன்றாவது நாளான நேற்று துணைசபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடந்தது.
இந்த பதவிக்கு மோகன் சிங் பிஷ்டை முதல்வர் ரேகா குப்தா முன்மொழிந்து முதல் தீர்மானத்தை கொண்டு வந்தார். அதை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வழிமொழிந்தார்.
இரண்டாவது தீர்மானத்தை அனில் குமார் சர்மா முன்மொழிந்தார். கஜேந்தர் சிங் யாதவ் வழிமொழிந்தார். ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகன் சிங் பஷ்ட்டுக்கு சபாநாயகர் விஜேந்தர் குப்தா, முதல்வர் ரேகா குப்தா மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
சமீபத்தில் நடந்த தேர்தலில், முஸ்தபாபாத் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட மோகன் சிங் பிஷ்ட், ஆம் ஆத்மி கட்சியின் அடீல் அகமது கானை 17,000 ஓட்டுகளுக்கும் மேல் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கடந்த 1998 முதல் 2015 வரை கரவால் நகர் தொகுதியில் இருந்து மோகன் சிங் பிஷ்ட் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 2020ல் மீண்டும் அந்த இடத்தை வென்றார்.