கர்நாடகாவை பழிவாங்கும் மத்திய அரசு அமைச்சர் ராமலிங்க ரெட்டி குற்றச்சாட்டு
கர்நாடகாவை பழிவாங்கும் மத்திய அரசு அமைச்சர் ராமலிங்க ரெட்டி குற்றச்சாட்டு
ADDED : மே 02, 2024 06:33 AM

விஜயபுரா: “சட்டசபை தேர்தலில் தோற்கடித்ததால், கர்நாடகாவை மத்திய அரசு பழி வாங்குகிறது. வறட்சி நிவாரணம் வழங்கவில்லை,” என, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி குற்றம் சாட்டினார்.
விஜயபுராவில் நேற்று அவர் கூறியதாவது:
மாநிலத்தில் வறட்சி சூழ்ந்துள்ளது. மத்திய அரசு ஏழு மாதங்களாக வறட்சி நிவாரணம் வழங்கவில்லை. சட்டசபை தேர்தலில் தோற்கடித்த கோபத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கர்நாடகாவை பழி வாங்குகிறது.
பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், கர்நாடகாவை அலட்சியம் செய்கின்றனர். மாநிலத்தில் இருந்து, மத்திய அரசுக்கு, 4.34 லட்சம் கோடி ரூபாய் வரியாக செல்கிறது. ஒரு ரூபாயில், 13 பைசா மட்டும் திரும்ப வருகிறது. இதையே முதல்வர் சித்தராமையா மக்களிடம் விவரித்துள்ளார்.
வடமாநிலங்களுக்கு நிதியுதவி வழங்குவதில் மத்திய அரசு தாராளம் காண்பிக்கிறது. மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தும், மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்தும் பயனில்லை.
மாநிலத்துக்கு பல விஷயங்களில் அநியாயம் நடந்தும் பா.ஜ., - எம்.பி.,க்கள் வாய் திறக்கவில்லை.
கடந்த 2008ல், பெங்களூரின் கண்டீரவா மைதானம் அருகில் குண்டுவெடிப்பு நடந்தபோது, 2020ல் குண்டுவெடிப்பு நடந்தபோது, எடியூரப்பா முதல்வராக இருந்தார்.
கடந்த, 2013ல் மல்லேஸ்வரத்தில் குண்டுவெடிப்பு நடந்தபோது, ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக இருந்தார், 2022ல் குண்டுவெடிப்பு நடந்தபோது, முதல்வராக இருந்தவர் பசவராஜ் பொம்மை. 2010ல் குண்டுவெடிப்பு நடந்தபோதும், மாநிலத்தில் பா.ஜ., அரசு இருந்தது.
இப்போது ராமேஸ்வரம் கபேவில் நடந்த குண்டுவெடிப்பில், காங்கிரஸ் அரசை விமர்சிக்கின்றனர். இதற்கு முன்பு குண்டுவெடிப்பு நடந்தபோது, எந்த கட்சி ஆட்சியில் இருந்தது என்பதை கூறட்டும்.
உலகில் அதிகம் பொய் சொல்பவர் என்றால், அது பிரதமர் மோடிதான். இம்முறை லோக்சபா தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது கஷ்டம். ஏனென்றால் மோடியின் செல்வாக்கு குறைந்துள்ளது. அவரது நிகழ்ச்சிக்கு மக்கள் வருவதில்லை. காலி நாற்காலிகள் தென்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

