உ.பி., முன்னாள் எம்.எல்.ஏ., மருத்துவமனையில் அனுமதி
உ.பி., முன்னாள் எம்.எல்.ஏ., மருத்துவமனையில் அனுமதி
ADDED : மார் 27, 2024 12:35 AM

லக்னோ:சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ., முக்தார் அன்சாரி, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மவு தொகுதி எம்.எல்.ஏ.,வாக 1996 முதல் 2022ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் முக்தார் அன்சாரி, 60. குவாமி ஏக்தா தளம் கட்சியில் இருந்த இவர், 2022ல் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் என்ற கட்சியில் இணைந்தார்.
இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. சில வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு உ.பி.,யின் பண்டா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், நேற்று காலையில் அன்சாரிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, பண்டா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அதிகாலை 3:55 மணிக்கு சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.அவரது சகோதரரும், காஜிபூர் லோக்சபா எம்.பி.,யுமான அப்சல் அன்சாரி கூறியதாவது:
காஜிபூரில் உள்ள முகமதாபாத் காவல் நிலையத்தில் இருந்து எனக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றோம்.
முதல்வர் அலுவலகத்துக்கு போனில் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் கோரக்பூர் சென்றிருந்தார். பண்டா மருத்துவக் கல்லுாரியில் போதிய மருத்துவ வசதிகள் இல்லையென்றால், லக்னோ மேதாந்தா மருத்துவமனையிலோ அல்லது வேறு ஏதேனும் தனியார் மருத்துவமனையிலோ முக்தாரை சேர்க்க அனுமதிக்க வேண்டும் என முதல்வரிடம் கேட்க விரும்பினேன்.
அதேபோல, சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்கவில்லை என்றால், நாங்களே ஏற்றுக் கொள்வோம்.
கடந்த 21ம் தேதி பாரபங்கி நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, முக்தார் அன்சாரிக்கு சிறையில் ரத்தத்தில் மெதுவாக கலக்கும் விஷம் கொடுக்கப்பட்டு இருப்பதாக வழக்கறிஞர் முறையிட்டார். ஆனால், நீதிமன்றம் அதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

