ADDED : ஜூலை 01, 2024 12:35 AM

புதுடில்லி: நாட்டின் ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே, 2022-ம் ஆண்டு பதவியேற்றார். இவரது பதவிக்காலம் கடந்த மே 31-ம் தேதி நிறைவடைந்தது. லோக்சபா தேர்தலையொட்டி, அவரது பதவிக்காலம் ஜூன் 30- வரை ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது.
தேர்தலுக்கு பின் புதிய அரசு பொறுப்பேற்றதும், ஜூன் 11ல், இந்திய ராணுவ ஜெனரல் உபேந்திர திவேதியை புதிய தளபதியாக நியமித்து ராணுவத்துறை அறிவித்துஇருந்தது.
இந்நிலையில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே நேற்று ஓய்வு பெற்றார். தொடர்ந்து ராணுவ நடைமுறைகளின்படி புதிய தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி பொறுப்பேற்றார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இவர், ரேவா சைனிக் பள்ளியில் படிப்பை முடித்து, 1981ல் தேசிய ராணுவ அகாடமியில் சேர்ந்தார். அங்கு ராணுவப் பயிற்சியை முடித்து, 1984ல் ஜம்மு - காஷ்மீர் ரைபிள்சின் 18வது படைப்பிரிவில் சேர்ந்தார். பின், அந்த படைக்கு தலைமை தாங்கும் பொறுப்புக்கு உயர்ந்தார்.
ராணுவத்தின் வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பணியாற்றி உள்ளார்.