'என்னை தகுதி நீக்கம் செய்ய யு.பி.எஸ்.சி.,க்கு அதிகாரமில்லை' 'பந்தா' ஐ.ஏ.எஸ்., பூஜா பரபரப்பு பதில்
'என்னை தகுதி நீக்கம் செய்ய யு.பி.எஸ்.சி.,க்கு அதிகாரமில்லை' 'பந்தா' ஐ.ஏ.எஸ்., பூஜா பரபரப்பு பதில்
ADDED : ஆக 30, 2024 02:43 AM

புதுடில்லி: கடந்த, 2022ல் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பூஜா கேத்கர் என்ற பெண், மஹாராஷ்டிராவின் புனேவில் பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அடாவடி
பணி காலத்தில் பல்வேறு அடாவடிகளில் ஈடுபட்டதை அடுத்து அவர் மீது அடுக்கடுக்காக புகார்கள் குவிந்தன.
இதை விசாரிக்கும்போது, மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பித்த பூஜா, போலி ஆவணங்கள் வாயிலாக ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகளை பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக விசாரித்த யு.பி.எஸ்.சி., பூஜாவின் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சியை கடந்த மாதம் ரத்து செய்தது. வருங்காலத்தில் அவர் தேர்வு எழுதவும் தடை விதித்தது. இதை தொடர்ந்து எந்த நேரத்திலும் பூஜா கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவானது.
இதையடுத்து, டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் பூஜா கேத்கர் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். மனு தள்ளுபடி செய்யப்பட்டது. டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
முன் ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவித்த யு.பி.எஸ்.சி., 'இந்த முறைகேட்டில் பூஜா கேத்கருக்கு ஆதரவாக பலர் செயல்பட்டு இருக்க வாய்ப்புள்ளதால் அவரை கைது செய்து விசாரிக்க வேண்டியது அவசியம்' என, வாதிட்டது.
இந்த வழக்கில், பூஜா கேத்கர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:
நான் போலி ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்த பின் என் தேர்ச்சியை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் யு.பி.எஸ்.சி.,க்கு இல்லை.
அதிகாரம்
மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறைக்கு மட்டுமே என் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'முன் ஜாமினை எதிர்க்கும் யு.பி.எஸ்.சி.,யின் பதில் மனுவை மறு ஆய்வு செய்ய அவகாசம் வேண்டும்' என, பூஜா கேத்கர் தரப்பு வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்று, பூஜா கேத்கரை கைது செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.