ADDED : மே 30, 2024 06:37 AM
தங்கவயல்: தங்கவயல் உரிகம் தபால் நிலையம் மீண்டும் திறக்கப்பட உள்ளது. கட்டடத்தை புதுப்பிக்கும் பணிகள் துவங்கி உள்ளன.
தங்கவயலில் 1886ல்உரிகம் தபால் நிலையம் திறக்கப்பட்டது.உள்நாடு, வெளிநாடுகளுடன்கடிதத் தொடர்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதுவே தங்கவயலின் தலைமை தபால் நிலையமாக இயங்கியது.
கடந்த 1880ல் தங்கச்சுரங்கத்தை இங்கிலாந்து நாட்டின் ஜான் டெய்லர் கம்பெனி தோண்ட ஆரம்பித்தது. அப்போது இங்கு நிர்வாகத்தில் இருந்தவர்கள் அனைவரும் வெளிநாட்டினர் தான்.
சுரங்கத்தைத் தோண்டும் பணியில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். எனவே இவர்களுக்கான வெளியுலக தொடர்பு கடிதங்கள் மூலமே இருந்து வந்தது. இவர்களுக்காக உரிகம் தபால் நிலையம் திறக்கப்பட்டது.
அதன் பின், மக்கள்தொகை அதிகரிப்பால், கோரமண்டல், சாம்பியன், மாரிகுப்பம், ராபர்ட்சன் பேட்டை, ஆண்டர்சன் பேட்டைஆகிய பகுதிகளிலும் தபால் நிலையங்கள் திறக்கப்பட்டன.
நீண்ட வரலாறு கொண்ட உரிகம் தபால் நிலையத்தின்பழமையான கட்டடம் பழுதடைந்ததால், அலுவலகம் இயங்க தகுதியற்றது என்ற முடிவுக்கு தபால் துறை வந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பு உரிகம் தபால் நிலையம் தற்காலிகமாகமூடப்பட்டது. ராபர்ட்சன் பேட்டை தபால் நிலையத்திலேயே உரிகம்தபால் நிலைய கிளையும் இணைத்து செயல்படத்துவங்கியது.
கைவிடப்பட்ட உரிகம் தபால்நிலைய கட்டடத்தை புதுப்பித்து, அதை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என, பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், தற்போது பழைய தபால் அலுவலக கட்டடத்தை புதுப்பிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஜூன் 18ல் தபால் நிலையம் பழைய கட்டடத்தில் செயல்படத் துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
உரிகம் தபால் நிலையம் இயங்கினால்,கென்னடிஸ் 1, 2, 3, 4, 5, 6வது வட்டங்கள், மில் பிளாக், சாமிநாத புரம், அசோக் நகர், வாக்கர்ஸ் ஷாப்ட் லைன் குவாட்ரஸ், சுமிங்பாத் லைன், என்.டி., பிளாக், எஸ்.டி., பிளாக்., டபிள்யு.டி., பிளாக், ஐந்து விளக்கு ஆகிய பகுதிகளின் மக்கள் பயன்பெறுவர்.