ADDED : ஜூன் 27, 2024 06:49 AM

பெங்களூரு, : 'வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதற்கு முதல்வர் சித்தராமையா பொறுப்பேற்க வேண்டும். மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் ராஜினாமா செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தி, நாளை கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிட்டு பா.ஜ., போராட்டம் நடத்துகிறது.
கர்நாடகாவில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் நலனுக்காக, வால்மீகி மேம்பாட்டு ஆணையம் செயல்படுகிறது. இந்த வாரியத்தில், 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பணம் பரிமாற்றம்
இதை எதிர்க்கட்சியினர் கடுமையாக கண்டித்தனர். மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா, தன் பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக, யூனியன் பேங்க் ஆப் இண்டியா அளித்த புகாரின்படி, சி.பி.ஐ., விசாரிக்கிறது. மேலும், மாநில அரசு சார்பில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கப்படுகிறது.
இது குறித்து, டில்லியில் மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, நேற்று கூறியதாவது:
கர்நாடக மாநில அரசு, மக்களுக்கு சாபமாக அமைந்துள்ளது. ஆங்காங்கே சில அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தி, சிறிது பணம் கிடைத்துள்ளது என்று சப்பை கட்டுகிறது. தெலுங்கானாவில் உள்ள வங்கி கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்து, எடுத்துள்ளனர்.
இதற்கு முன்பும் காங்கிரஸ் ஆட்சியில், இத்தகைய குற்றச்சாட்டு எழுந்த போது, ஏ.சி.பி., எனும் லஞ்ச ஒழிப்பு படை மூலம் மூடி மறைத்தனர்.
முறைகேடு
இந்த விவகாரத்தில், மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீலுக்கும் தொடர்பு உள்ளது. எனவே அவரும், வால்மீகி மேம்பாட்டு வாரிய தலைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
வாரியத்தில், 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதற்கு, நிதித்துறையை நிர்வகிக்கும் முதல்வர் சித்தராமையா பொறுப்பேற்க வேண்டும். இதை வலியுறுத்தி, வரும் 28ம் தேதி நாளை, மாநிலம் முழுதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களையும் பா.ஜ., சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.