வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு; ஹைதராபாத் கூட்டுறவு வங்கி தலைவர் கைது
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு; ஹைதராபாத் கூட்டுறவு வங்கி தலைவர் கைது
ADDED : ஜூன் 05, 2024 10:12 PM

பெங்களூரு: வால்மீகி மேம்பாடு ஆணையத்தின், பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக, ஹைதராபாத்தின் கூட்டுறவு வங்கி தலைவரை எஸ்.ஐ.டி., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஷிவமொகாவின், வினோபா நகரில் வசித்தவர் சந்திரசேகரன், 55. இவர் வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் பணியாற்றினார். பெங்களூரின், வசந்த நகரில் இந்த ஆணையத்தின் அலுவலகம் உள்ளது. இவர் மே 27ல், தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அதில், 'வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் வளர்ச்சிக்காக, கர்நாடக அரசு 187 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. இதை சட்டவிரோதமாக வேறு வங்கி கணக்குக்கு மாற்றும்படி, எனக்கு நெருக்கடி கொடுத்தனர். இந்த முறைகேட்டில், ஆணைய நிர்வாக இயக்குனர் பத்மநாபா, கணக்கு அதிகாரி பரசுராம் துக்கண்ணவர், வங்கி அதிகாரி சுஷிஷ்மதா ரவுலுக்கு தொடர்புள்ளது' என, விவரித்திருந்தார்.
இந்த வழக்கை மாநில அரசு சி.ஐ.டி., விசாரணைக்கு ஒப்படைத்தது. அதிகாரிகளும் சிறப்பு குழு அமைத்து, விசாரணை நடத்துகின்றனர். இதற்கிடையில், பரசுராம் துக்கண்ணர், பத்பநாபா சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று, பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா, ஜூன் 6க்குள் பதவி விலக வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் அசோக், மாநில தலைவர் விஜயேந்திரா உட்பட பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால் ராஜினாமா செய்ய முடியாது என, நாகேந்திரா பிடிவாதம் பிடிக்கிறார்.
இந்நிலையில் வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக தெலுங்கானா, ஹைதராபாத்தின், நல்லகுன்டா பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கி தலைவர் சத்ய நாராயணா இடகாரியை, எஸ்.ஐ.டி., அதிகாரிகள், நேற்று முன்தினம் கைது செய்தனர்.
யூனியன் வங்கியில் உள்ள வால்மீகி மேம்பாடு ஆணையத்தின் பணத்தை, 18 போலியான வங்கி கணக்குகள் உருவாக்கி, பரிமாற்றம் செய்யப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை பற்றி ஆழமாக விசாரித்த போது, போலி வங்கி கணக்குகளில், பணம் பரிமாற்றம் செய்தது, ஹைதராபாத்தின் கூட்டுறவு வங்கி தலைவர் சத்ய நாராயணா என்பது தெரிந்தது.
இவரை கைது செய்த எஸ்.ஐ.டி., அதிகாரிகள், பெங்களூருக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜூன் 12 வரை, தங்கள் கஸ்டடியில் எடுத்துள்ளனர்.
சி.பி.ஐ., விசாரணை
இதற்கிடையில், கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக, மும்பையின் யூனியன் வங்கி, சி.பி.ஐ.,யில் புகார் அளித்துள்ளது. சி.பி.ஐ.,யும் விசாரணையை துவங்கியுள்ளது.
இது தொடர்பாக, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:
கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின், பல கோடி ரூபாய் சட்டவிரோத பரிமாற்றம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐ., யிடம் இருந்து முறையாக கோரிக்கை வந்த பின், வழக்கை சி.பி.ஐ., யிடம் ஒப்படைப்பது குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
வங்கியில் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான முறைகேடு நடந்தால், சி.பி.ஐ., தானாகவே முன் வந்து விசாரணை நடத்தலாம் என, மத்திய அரசின் விதிமுறையில் உள்ளது. எனவே யூனியன் வங்கி அளித்த புகாரின்படி, சி.பி.ஐ., விசாரணை நடத்துகிறது. இதற்கு கர்நாடக அரசு, முழு ஒத்துழைப்பு தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.