வால்மீகி மேம்பாட்டு வாரிய முறைகேடு 'மாஜி' அமைச்சருக்கு 18ம் தேதி வரை காவல்
வால்மீகி மேம்பாட்டு வாரிய முறைகேடு 'மாஜி' அமைச்சருக்கு 18ம் தேதி வரை காவல்
ADDED : ஜூலை 14, 2024 05:15 AM

பெங்களூரு : வால்மீகி மேம்பாட்டு வாரிய முறைகேடு வழக்கில், காங்கிரசை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, வரும் 18ம் தேதி வரை, அமலாக்கத்துறை காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக பழங்குடியினர் நலத்துறைக்கு உட்பட்ட கர்நாடக வால்மீகி மேம்பாட்டு வாரியத்துக்கு, 187 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியிருந்தது. இதில், 94 கோடி ரூபாய் பணம், சட்டவிரோதமாக பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தனி தனி விசாரணை
இதுகுறித்து, மாநில அரசு சார்பில், சிறப்பு புலனாய்வு குழுவும், சி.பி.ஐ.,யும் தனித்தனியாக விசாரித்து வருகின்றன. இதற்கிடையில், சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்திருப்பதாக, அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதற்கிடையில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா, தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரது வீடு, வால்மீகி மேம்பாட்டு வாரிய தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான பசனகவுடா தத்தல் வீடு, அலுவலகங்களில், இம்மாதம் 10, 11 ஆகிய இரண்டு நாட்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதிகாரிகளுக்கு சரியாக ஒத்துழைப்பு தராததால், பெங்களூரு சாந்திநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் நாகேந்திராவை அழைத்துச் சென்றனர்.
இரவு வரை விசாரணை நடத்தியும், 'எனக்கு ஒன்றும் தெரியாது' என்ற பதிலை மட்டுமே அவர் கூறியதாக தெரிகிறது.
ஏற்கனவே திரட்டி வைத்திருந்த ஆதாரங்களின் அடிப்படையில், நேற்று முன்தினம் இரவு அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். நள்ளிரவில் சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, சம்பிகேஹள்ளியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி கஜானன் பட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கூடுதல் விசாரணை நடத்திய வேண்டி உள்ளதால், தங்கள் காவலில் ஒப்படைக்கும்படி அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தலைமறைவு
அதன்படி, வரும் 18ம் தேதி வரை, அமலாக்கத்துறை காவலில், நாகேந்திரா ஒப்படைக்கப்பட்டார்.
இதற்கிடையில், எம்.எல்.ஏ., பசனகவுடா தத்தல், நேற்று முன்தினம் இரவு முதல் தலைமறைவாகிவிட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
வால்மீகி மேம்பாட்டு வாரியத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடக்கிறது. அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நாகேந்திரா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயத்தை அரசியல் ரீதியாக சித்தரிக்கக் கூடாது. மத்திய விசாரணை அமைப்புகள் அரசியல் நெருக்கடிக்கு பணியாமல், தன்னிச்சையாக செயல்பட வேண்டும்.
பரமேஸ்வர்,
அமைச்சர், உள்துறை

