ADDED : மார் 28, 2024 10:45 PM

பாகல்கோட் லோக்சபா தொகுதியில், சீட் கிடைக்காமல் கோபத்தில் கொந்தளிக்கும் வீணா காசப்பனவரை, பா.ஜ.,வுக்கு இழுக்க முயற்சி நடக்கிறது.
பாகல்கோட் தொகுதியில் போட்டியிட, ஹுன்குந்த் காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவரின் மனைவி வீணா மிகவும் ஆர்வமாக இருந்தார். தன் சுறுசுறுப்பை அடையாளம் கண்டு, மேலிடம் சீட் கொடுக்கும் என, எதிர்பார்த்தார். வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
பாகல்கோட் தொகுதி காங்., சீட்டுக்கு, அமைச்சர் சிவானந்த பாட்டீலின் மகள் சம்யுக்தா, வீணா காசப்பனவர் இடையே, கடுமையான போட்டி எழுந்தது. இந்த போட்டியில் சம்யுக்தாவே வெற்றி பெற்றார்.
வீணாவுக்கு சீட் கொடுக்க வேண்டும் என, இவரது ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்தும் பலனில்லை. தனக்கு சீட் கிடைக்காதது குறித்து, அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
தற்போது கோபத்தில் உள்ள அவர், சுயேச்சையாக போட்டியிடவும் ஆலோசிக்கிறார். ஆதரவாளர்களும் கூட, சுயேச்சையாக களமிறங்கும்படி ஆலோசனை கூறியுள்ளனர். இவரது கோபம், வேட்பாளர் சம்யுக்தாவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. வீணாவை சமாதானம் செய்ய, காங்., தலைவர்கள் முயற்சிக்கின்றனர்.
இதற்கிடையில் இவருக்கு பா.ஜ., வலை விரித்துள்ளது. கட்சிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளது. அவருக்கு தங்கள் கட்சியில் நல்ல எதிர்காலம் உள்ளது என, நம்பிக்கை அளித்துள்ளனர். வீணாவும் ஆதரவாளர்களுடன், இது குறித்து ஆலோசிக்கிறார்.
இவரது கணவர் விஜயானந்த் காசப்பனவர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். வீரசைவ லிங்காயத் வளர்ச்சி கார்ப்பரேஷன் தலைவராகவும் பதவி வகிக்கிறார். இவர் தன் மனைவி வீணாவை கட்சியை விட்டு செல்லாமல், தடுத்து நிறுத்துவார் என, காங்., தலைவர்கள் நம்புகின்றனர்.
- நமது நிருபர் -

