மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர விவிபேட் வழக்கில் இன்று தீர்ப்பு
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர விவிபேட் வழக்கில் இன்று தீர்ப்பு
UPDATED : ஏப் 26, 2024 01:40 AM
ADDED : ஏப் 25, 2024 09:13 PM

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் கருவிகளில் பதிவான ஓட்டுகளை எண்ண கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
லோக்சபாவுக்கு நடக்க உள்ள ஏழு கட்ட தேர்தல்களில் தற்போது முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு ஏப். 19-ல் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலில் அனைத்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் எனப்படும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி நாம் யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை ஒப்புகை சீட்டுடன் உறுதி செய்யும் கருவியாகும்.
இந்நிலையில் ஓட்டு இயந்திரத்துடன் 100 சதவீதம் விவிபேட்டில் பதிவாகும் ஓட்டுகளுடன் ஒப்புகை சீட்டுகளையும் சரிபார்க்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ்கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், சிறிய கட்டுப்பாட்டு கருவி வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டு உள்ளதா அல்லது விவிபேட் இயந்திரத்தில் பொருத்தப்பட்டு உள்ளதா ? வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறிய கட்டுப்பாட்டு கருவியை ஒரே ஒரு முறை மட்டும் தான் பயன்படுத்த முடியுமா? என பல்வேறு கேள்வி எழுப்பினர்.
தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப அதிகாரியை பிற்பகலில் ஆஜராக உத்தரவிட்டனர். இதையடுத்து தேர்தல் அதிகாரி ஆஜரானார்.
அப்போது அனைத்து சிறிய கட்டுப்பாட்டு கருவிகளும் ஒரு முறை மட்டுமே புரோகிராம் செய்ய முடியும்; அதை மாற்ற முடியாது. சின்னங்களை ஏற்றும் அலகுகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை ECIL 1400 அலகுகளையும், BHEL 3400 அலகுகளையும் கொண்டுள்ளது. விவிபேட், இவிஎம், கண்ட்ரோலர் ஆகிய மூன்றும் தனித்தனியாக புரோகிராம் செய்யப்பட்டது. தேர்தலுக்கு பிறகு மூன்று யூனிட்களுமே சீலிட்டு வைக்கப்படுகின்றன'' என விளக்கமளித்தார்.
இதனையடுத்து, ''தொழில்நுட்பம் சார்ந்த விவகாரங்களில் தேர்தல் ஆணையம் கூறும் தகவல்களை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என கூறி தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் இன்று (ஏப்.26) தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

