இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது துருக்கி
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது துருக்கி
ADDED : நவ 08, 2025 06:27 PM

அங்காரா: காசா இனப்படுகொலையை முன் வைத்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு துருக்கி கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை இஸ்தான்புல் தலைமை அரசு வக்கீல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், காசா இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் அதிகாரிகள் 37 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிகாரிகளின் முழுமையான பட்டியலில் எந்த எந்த அதிகாரிகளுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது, அவர்கள் என்ன பதவி வகிக்கின்றனர் என்பன உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், ராணுவ தலைமை லெப்டினன்ட் ஜெனரல் இயால் ஜமீர் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்று இருக்கின்றன.
கைது வாரண்ட் பற்றிய துருக்கியின் அறிவிப்புக்கு ஹமாஸ் வரவேற்பு தெரிவித்து உள்ளது. அதே நேரத்தில் இந்த அறிவிப்பு மற்றும் நடவடிக்கைக்கு இஸ்ரேல் கடுமையான தமது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. இது ஒரு விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டு இருக்கும் நாடகம் என்று விமர்சித்து உள்ளது.
இதுகுறித்து, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் கியோடன் சார் தமது எக்ஸ் வலைதள பதிவில், எர்டோகனின் ஆட்சியில், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், மேயர்கள் ஆகியோரை மவுனமாக்குவதற்காக கையாளப்படும் ஒரு கருவியாக நீதித்துறை மாறி இருக்கிறது என்று கூறியுள்ளார்.
காசா யுத்தத்தை எப்போதும் வெளிப்படையாக விமர்சிக்கும் முக்கிய நாடுகளில் துருக்கியும் ஒன்று. கடந்தாண்டு சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்காவின் வழக்கு ஒன்றில் இணைந்து, இஸ்ரேல் நடத்தியது இனப்படுகொலை என்று குற்றம்சாட்டி இருந்தது, குறிப்பிடத்தக்கது.

