விஜயேந்திரா ராஜினாமா செய்யணும் பா.ஜ., - எம்.எல்.ஏ., போர்க்கொடி
விஜயேந்திரா ராஜினாமா செய்யணும் பா.ஜ., - எம்.எல்.ஏ., போர்க்கொடி
ADDED : ஆக 13, 2024 07:35 AM

தாவணகெரே: ''காங்கிரஸ் போட்ட பிச்சையால், விஜயேந்திரா எம்.எல்.ஏ., ஆனார் என்று துணை முதல்வர் சிவகுமார் குற்றஞ்சாட்டி உள்ளார். எனவே ஷிகாரிபுரா எம்.எல்.ஏ., பதவியை விஜயேந்திரா ராஜினாமா செய்ய வேண்டும்,'' என ஹரிஹரா பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரீஷ் தெரிவித்தார்.
கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தோல்வி அடைந்த பா.ஜ., ஆட்சியை இழந்தது. ஒரே ஆண்டில் லோக்சபா தேர்தல் வந்ததையடுத்து, தகுதி வாய்ந்த மாநில தலைவர் தேவை என்று கட்சி மேலிடம் கருதியது.
மாநில தலைவர்
இதன்படி, கர்நாடகாவில் பா.ஜ.,வை வளர்த்த, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின் நடந்த லோக்சபா தேர்தலுக்காக மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சி வளர்ச்சி பணியில் ஈடுபட்டார்.
முதல் முறை எம்.எல்.ஏ.,வான அவருக்கு மாநில தலைவர் பொறுப்பு வழங்கியதை, மூத்த தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
குறிப்பாக, எடியூரப்பா குடும்பத்துக்கு முக்கியமான பதவிகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், மூத்த தலைவர்களின் எதிர்ப்பை, கட்சி மேலிடம் கண்டுகொள்ளவில்லை.
கட்சிக்குள் எதிர்ப்பு
இதற்கிடையில், மாநில காங்கிரஸ் ஆட்சியின் முறைகேடுகளை கண்டித்து சமீபத்தில், விஜயேந்திரா தலைமையில் நடந்த மைசூரு பாதயாத்திரை வெற்றி பெற்றது.
இது, மூத்த தலைவர்களுக்கு மேலும் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலையும் கொண்டு உள்ளனர்.
இந்நிலையில், தாவணகெரே மாவட்டம், ஹரிஹரா சட்டசபை தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரீஷ் நேற்று கூறியதாவது:
காங்கிரஸ் போட்ட பிச்சையால், விஜயேந்திரா எம்.எல்.ஏ., ஆனார் என்று துணை முதல்வர் சிவகுமார் குற்றஞ்சாட்டி உள்ளார். இதன் மூலம், பா.ஜ., காங்கிரஸ் தலைவர்கள் சமரச அரசியல் செய்வது தெரிகிறது.
எனவே, ஷிகாரிபுரா எம்.எல்.ஏ., பதவியை விஜயேந்திரா ராஜினாமா செய்ய வேண்டும்.
அதன்பின் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். காங்கிரஸ் போட்ட பிச்சையால் எம்.எல்.ஏ., ஆகும் அவசியம் பா.ஜ.,வுக்கு இல்லை என்பதை காண்பிக்க வேண்டும்.
போராட்டம், கட்சி வளர்ச்சி மூலம் பெரிய தலைவராக வளர்ந்த எடியூரப்பா, தன் குடும்பம் சுகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். தாவணகெரேவில், காங்கிரஸ் தலைவர் சாமனுார் சிவசங்கரப்பா குடும்பத்தினருடன் சமரச அரசியல் செய்கிறார்.
எடியூரப்பாவுக்கு ஆதரவாக, ஹாவேரி எம்.பி., பசவராஜ் பொம்மையும் கைகோர்த்துள்ளார்.
இது குறித்து, கட்சி மேலிடத்துக்கு புகார் கொடுத்தும், எந்த பயனில்லை. சமரச அரசியல் மூலம், பா.ஜ., - காங்கிரஸ் தலைவர்கள், தங்களின் ஊழலை மறைக்க முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.