ADDED : ஏப் 23, 2024 05:12 AM
சாம்ராஜ்நகர் : ஏரியை நிரப்பாத காரணத்தால், லோக்சபா தேர்தலை புறக்கணிக்க, குந்தகெரே கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர்.
சாம்ராஜ் நகர் குண்டுலுபேட்டின் குந்தகெரே கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிராமத்தினர் குடிநீருக்காக ஏரி நீரை நம்பியுள்ளனர். மழை பெய்யாததால், ஏரி நிரம்பவில்லை.
மக்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீர் தேவைக்காக, கல்லுகட்டே அணையில் இருந்து, வட்டகெரே ஏரி மற்றும் நல்லுாரு அமானி ஏரியில் நீர் நிரப்ப வேண்டும் என, கிராமத்தினர் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த 16ல் குண்டுலுபேட்டின், கல்லுகட்டே அணையில் இருந்து, தாலுகா தாசில்தார் அலுவலகம் வரை, பாதயாத்திரை நடத்தி கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வெறுப்படைந்த கிராமத்தினர், நேற்று முன்தினம் நள்ளிரவு வரை, ஆலோசனை கூட்டம் நடத்தினர். இம்முறை லோக்சபா தேர்தலில், எந்த கட்சிக்கும் ஓட்டு போட வேண்டாம் என, முடிவு செய்துள்ளனர்.

