ADDED : மார் 25, 2024 06:38 AM

ராய்ச்சூர்: மாண்டியாவைச் சேர்ந்தவர் சீனிவாஸ் கவுடா. இவரது மகள் சோனு, 29. ரீல்ஸ் வீடியோ பிரபலம். ராய்ச்சூரை சேர்ந்த 8 வயது சிறுமியை சட்டவிரோதமாக தத்தெடுத்ததாக சோனு மீது, குழந்தைகள் நல அதிகாரி கீதா ஆனேக்கல் என்பவர், பெங்களூரு பேடரஹள்ளி போலீசில் புகார் செய்தார்.
இதன்படி, கடந்த 22ம் தேதி, சோனு கைது செய்யப்பட்டார். அவரை நான்கு நாட்கள் காவலில் எடுத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், விசாரணைக்காக ராய்ச்சூர் அருகே உள்ள கச்சாபுரா கிராமத்திற்கு, சோனு நேற்று அழைத்து செல்லப்பட்டார். சிறுமியின் பெற்றோரிடம் போலீசார் விசாரித்து கொண்டு இருந்தனர். அப்போது சிறுமியின் வீட்டின் முன்பு, கிராம மக்கள் கூடினர்.
இதனால் அவசர, அவசரமாக விசாரணையை முடித்துவிட்டு, சோனுவை போலீஸ் வாகனத்தில், போலீசார் ஏற்றினர். அப்போது கிராம மக்கள் சிலர், போலீஸ் வாகனத்தை சூழ்ந்து, சோனுவை தாக்க முயன்றதால், பரபரப்பு உண்டானது. ஆனால் வாகனம் அங்கிருந்து வேகமாக சென்று விட்டது.
தத்தெடுக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் தந்தை கூறுகையில், 'பெங்களூரில் கூலி வேலை செய்த போது, சோனு வீட்டின் அருகே வசித்து வந்தோம். அதன்பின்னர் இங்கு வந்து விட்டோம். ஒரு நாள் இரவு சோனு வந்தார்.
'எனது மகளை நன்கு படிக்க வைப்பதாக கூறி, அழைத்து சென்றார். நாங்கள் எங்கள் மகளை தத்து கொடுக்கவில்லை. மகளை எங்களிடம் தந்து விடுங்கள்' என்றார்.
இதற்கிடையில், சோனுவின் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

