தி.மலை மலைச்சரிவு, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யார்? அரசிடம் பட்டியல் கேட்கிறது ஐகோர்ட்
தி.மலை மலைச்சரிவு, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யார்? அரசிடம் பட்டியல் கேட்கிறது ஐகோர்ட்
ADDED : அக் 25, 2025 04:52 AM

சென்னை: திருவண்ணாமலை மலைச்சரிவு மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் கிரிவல பாதையில் உள்ள ஓடைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் தாமரை குளத்தின் நான்கு பக்கங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.
கடந்த விசாரணையின் போது, ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த விபரங்களுடன் இக்குழு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆகியோர் ஆஜராகி, 'கண்காணிப்பு குழு அறிக்கையின்படி, திருவண்ணாமலையில் அடையாளம் காணப்பட்டு உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு, 'நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றனர்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆஜராகி, “மலை சரிவில் ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஓடைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்த நபர்களுக்கு எதிராக, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்று குற்றம் சாட்டினார்.
இதையடுத்து நீதிபதிகள், 'ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு எதிராக, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைச்சரிவு மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் பட்டியலை, தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டு, விசாரணையை நவ., 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

