ADDED : செப் 18, 2024 01:24 AM

ஹைதராபாத், தெலுங்கானாவில், விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பிரமாண்ட லட்டு செய்து, விநாயகர் சிலைகளை கரைக்கும் நாளன்று அதை ஏலம் விடுவது வழக்கம். அந்த வரிசையில், ஹைதராபாதின் பாலாபுர் பகுதியில் விடப்படும் லட்டு ஏலம் பிரசித்தி பெற்றது.
இங்கு கடந்த ஆண்டு ஏலம் விடப்பட்ட லட்டுவை, தாசரி தயானந்த் ரெட்டி என்பவர், 27 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இந்தாண்டு விடப்பட்ட ஏலத்தில், கோலன் சங்கர் ரெட்டி என்பவர், 30 லட்சம் ரூபாய்க்கு லட்டுவை ஏலம் எடுத்தார்.
பாலாபுரில் ஏலம் விடும் வழக்கம், 1994ல் துவங்கியது. அப்போது, 450 ரூபாய்க்கு துவங்கிய ஏல விற்பனை இன்று பல லட்சங்களை தொட்டுள்ளது.
ஹைதராபாதின் பண்டலாகுடாவில் உள்ள கீர்த்தி ரிச்மண்ட் வில்லாஸ் என்ற இடத்தில் நடந்த லட்டு ஏலத்தில், 1.87 கோடி ரூபாய்க்கு லட்டு ஏலம் போனது. அதை ஏலத்தில் எடுத்தவரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த ஏலத்தில் கிடைக்கும் பணம், சுற்று வட்டார கிராமங்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடப்படுவதாக ஏல கமிட்டியினர் தெரிவித்தனர்.
லட்டை ஏலம் எடுப்போர் மற்றும் ஏலத்தில் பங்கு பெறுவோர் வாழ்க்கையில் மேன்மேலும் வளர்ச்சி அடைந்து, உயரிய நிலையை அடைவர் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இதன் காரணமாகவே, ஏலம் எடுப்பதற்கு இங்கு கடும் போட்டி நடக்கிறது. ஏலம் எடுப்போர், லட்டை பொதுமக்களுக்கு வினியோகிப்பது வழக்கம்.