ADDED : மே 09, 2024 02:30 AM
குருகிராம்:கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் கைது செய்யப்பட்டார்.
ஹரியானா மாநிலம் சார்க்கி தாத்ரி மாவட்டம் கெரிபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் சவுரவ் என்ற சந்து, 24. இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக இருக்கும் சந்துவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், குர்ஜார் கிராமம் அருகே சவுரவ் சந்து பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை 5:40 மணிக்கு தனிப்படையினர் அங்கு சென்றனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த சவுரவ், போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். சவுரவ் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார்.
சுற்றிவளைத்து அவரைக் கைது செய்த போலீசார் பைக், கைத்துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி, பஞ்ச்கான் சவுக் அருகே மதுக் கடைக்கு கூட்டாளிகளுடன் சென்ற சவுரவ், அங்கு மது குடித்துக் கொண்டிருந்த இரண்டு பேரை சுட்டுக் கொன்றார்.
அதேபோல, ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் நடந்த ஒரு கொலை தொடர்பாகவும் சவுரவை போலீசார் தேடி வந்தனர்.